காஞ்சிபுரம் மாவட்டம், நங்கநல்லூரைச் சேர்ந்த விஜய் வீரராகவன், தனது அம்மா வசந்தலட்சுமி, மனைவி வத்சலா, மகன்கள் விஷ்ணு மற்றும் அதிருத்துடன் இரண்டு நாள்களுக்கு முன்பு கேரளா கோயிலுக்குச் சென்றிருந்தார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு நேற்று மாலை நங்காநல்லூருக்கு கிளம்பினார்கள். இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த ஐயனார்பாளையம் அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அதனால் அணிவகுத்து நின்ற வாகனங்களின் பின்னால் காரை நிறுத்தியிருக்கிறார் விஜய் வீரராகவன், அப்போது பின்னால் இருந்து வேகமாக வந்த சரக்கு லாரி கட்டுப்பாட்டை இழந்து காரின் மீது மோதியது. அதேபோல அந்த லாரியின் பின்னால் அடுத்தடுத்து வந்த லாரிகளும், வாகனங்களும் மோதின. அதனால் முன்னால் நின்றிருந்த கார் நொறுங்கி, விஜய் வீரராகவன், அவரது அம்மா, மனைவி, இரண்டு மகன்கள் என 5 பேரும் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வேப்பூர் போலீஸார், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மது போதை ஒட்டுநர்.. சீறிய லாரி! – மூன்று பேர் உயிரிழப்பு!
இந்த கோர விபத்து நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, அதே வேப்பூரில் வேறொரு லாரி மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த தொரவலூர் கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா அருளரசன். அவரின் மகள் ஓவியா விருத்தாசலத்தில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். சங்கீதா அருளரசன் நேற்று மேல்மருவத்தூர் கோயிலுக்குச் சென்றிருந்ததால், அவரின் உறவினரான குமாரசாமி என்பவர் தனது பேரன் தருணுடன் இருசக்கர வாகனத்தில் சென்று ஓவியாவை பள்ளியில் இருந்து அழைத்துக் கொண்டு வீட்டுக்கு திரும்பியிருக்கிறார். அப்போது நெய்வேலி என்.எல்.சியில் இருந்து சாம்பல் ஏற்றிக்கொண்டு வந்த பங்கர் லாரி, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மூவர் மீதும் ஏறி நிற்காமல் சென்றது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த குமாரசாமி, ஓவியா, தருண் உள்ளிட்ட மூன்று பேரும் தலை நசுங்கி அதே இடத்தில் உயிரிழந்தனர். அந்த விபத்தை பார்த்த பொதுமக்கள் உடனே விருத்தாசலம் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். உடனே அங்கு விரைந்த போலீஸார், உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற லாரியையும் மடக்கிப் பிடித்தனர். லாரி ஓட்டிச் சென்ற ஓட்டுநர் மணிகண்டன் அதிக மது போதையில் இருந்ததுதான் விபத்துக்கு காரணம் என்று தெரிவித்திருக்கும் போலீஸார், தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.