பொதுவா ஒவ்வொரு வகை உணவுக்கும் ஒரு ஊர் புகழ்பெற்றதா இருக்கும். அந்த ஊர்ல கிடைக்கிற அந்த உணவுக்கு தனித்துவமான ஒரு சுவையும் அடையாளமும் இருக்கும். திருநெல்வேலி அல்வா, கோவில்பட்டி கடலை மிட்டாய், மதுரை பன் பரோட்டா, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, ஆம்பூர் பிரியாணின்னு அந்த லிஸ்ட் பெருசு.
அதுபோல கரூருக்கு.. கரம். கரூர் என்றாலே தொழில் நகரம்னு எல்லாருக்கும் தெரியும். கரூரை சுத்தி எங்க பார்த்தாலும் பஞ்சாலைகளும், நெசவுத் தொழிற்சாலைகளும் இருக்கும். அதோட, கரூர்ல ஒவ்வொரு சந்துலயும், ரோட்டு ஓரமாவும், கடைவீதிகள்லயும் கரம் தள்ளுவண்டி கடைகளை பார்க்க முடியும்.
கரூர்ல கிடைக்கிற கரம்க்கு தனிச் சுவை உண்டு. கரம் கரூர்வாசிகளோட உணர்வோட கலந்திருக்கு. ’அட, கரம்ல அப்படி என்னதான் இருக்கு?’னு கேக்குறீங்களா?
கரம்ங்கிறது, ஒரு தட்டு வடை(தட்டை) மேல பீட்ரூட் துருவல், கேரட் துருவல், கொத்தமல்லி இதெல்லாம் வச்சு, கொஞ்சமா அதுக்கு மேலேயே தேங்காய் சட்னி, காரச் சட்னி அல்லது ஏதோ ஒரு சட்னி வெச்சு, அதுக்கு மேலேயே இன்னொரு தட்டு வடைய வச்சு சாப்பிடுறது. ஒரு குட்டி பர்கர் மாதிரினு சொல்லலாம்.
இது மட்டுமில்லாம, தட்டுவடைய உடைச்சி போட்டு, கொஞ்சமா பொரி, கடலை, ஏதாவது ஒரு வகை சட்னி, கேரட் அல்லது பீட்ரூட் துருவல், கொத்தமல்லி, கொஞ்சமா மிக்ஸர் போட்டு ஒரு கலக்கு கலக்கினா… அது கரம். இது கூட சம்சா சேர்த்தா சம்சா கரம், வேகவெச்ச முட்டையை கட் பண்ணி சேர்த்தா அது முட்டை கரம். இதுமட்டுமில்லைங்க… அப்பளம் கரம், அப்பளம் செட், கலக்கல் கரம், நொறுக்கல் கரம், காரப்பொரி கரம், முறுக்கு கரம்னு இன்னும் நெறைய வெரைட்டீஸ் இருக்கு. அதே மாதிரி கரம் வெரைட்டியில சேர்க்கிறதுக்கு சட்னியும் நிறைய வகையில இருக்கு. கொத்தமல்லிச் சட்னி, தேங்காய் சட்னி, காரச் சட்னி, தக்காளி சட்னினு சொல்லிக்கிட்டே போலாம்!
கரூர், ஜவஹர் பஜார்ல இருந்து பூ மார்க்கெட்டுக்கு போற வழியில 24 வருஷமா கரம் கடை நடத்திக்கிட்டு வருகிறார் மதுசூதனன். அவரோட மது கரம் ஸ்டாலுக்கு மாலை மங்கும் நேரத்துல ஒரு விசிட் அடிச்சோம். ஒரு தட்டு வடை செட்டும், முட்டை கரமும், சம்சா கரமும் ஆர்டர் பண்ணினோம். சொன்ன வேகத்துல போட ஆரம்பிச்சவரு, அஞ்சு நிமிஷத்தில மூணையும் போட்டு கையில கொடுத்துட்டாரு.
கரம்ல இருந்த தட்டு வடை, செம கிரிஸ்பி. அதுல போட்டிருந்த முட்டையும் சம்சாவும் ஒரு வித்தியாசமான டேஸ்ட்டை கொடுத்தது. மதுசூதனன் பேசும்போது, ’’எல்லா வயசுக்காரங்களுக்கும் இது பிடிக்கும்ங்க. குறிப்பா, நிறைய ஸ்கூல் பசங்களும், இளவயசு பசங்களும் வருவாங்க. குழந்தைகளுக்குன்னு சொன்னா, அதுல காரம் கொஞ்சம் கம்மியா போட்டு கொடுப்பேன்.
இது மட்டும் இல்லாம பால்கோவா, சீம்பாலும் (கடம்பு) இங்க கிடைக்கும். மாடு கன்னு போட்டவுடனே சில நாள்களுக்குக் கொடுக்கிற பால்தான் சீம்பால். இதை காய்ச்சினா முறிஞ்சு போயிடும். இதுல கொஞ்சமா சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து வேக வச்சோம்னா சீம்பால் ரெடி. உடம்புக்கு ரொம்ப நல்லது’’ என்றார்.
கரூர் கரம் கடைகள்ல கரம் மட்டுமில்ல, அதோட சேர்த்து தேன் மிட்டாய், கடலை மிட்டாய், இடிச்ச கடலை மிட்டாய், இலந்தை வடைனு இன்னும் நிறைய கிடைக்கும் சாப்பிட. பொதுவா சாயங்காலம் 6 மணியில இருந்து இரவு 10:30 மணி வரைக்கும் கடை போடுறாங்க. அடுத்த தடவை கரூர் பக்கம் வந்தா… கண்டிப்பா கரம் வாங்கிச் சாப்பிட்டுப் பாருங்க. கொடுக்கிற காசுக்கு அவ்ளோ வொர்த்து, அவ்ளோ டேஸ்ட்டுனு நீங்களும் சொல்லுவீங்க.