கலசப்பாக்கம் அருகே பர்வத மலைக்கு மாற்றுப்பாதை அமைக்க நவீன காமிராக்கள் மூலம் ஆய்வு

கலசப்பாக்கம்: கலசப்பாக்கம் அடுத்த தென் மகாதேவமங்கலம் கிராமத்தில் உள்ள  பர்வத மலைக்கு  மாற்றுப்பாதை அமைப்பது குறித்து நவீன காமிராக்கள் மூலம் இன்று ஆய்வு  செய்யப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே  தென் மகாதேவமங்கலம் கிராமத்தில் உள்ள 4,560அடி உயரமுள்ள பர்வதமலை தென் கைலாயம் என அழைக்கப்படுகிறது. இந்த மலை மீது 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மராம்பிகை சமேத மல்லிகார்ஜுனேஸ்வரர் கோயில் உள்ளது.  பவுர்ணமி, அமாவாசை மற்றும் விசேஷ நாட்களில் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

மேலும் பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் பர்வதமலையை கிரிவலம் செல்கின்றனர். இக்கோயிலுக்கு கடினமான மலைபாதை வழியாகவும், கடப்பாறை படிக்கட்டு வழியாகவும் பக்தர்கள் சென்று வருகின்றனர். புகழ்மிக்க பர்வதமலைக்கு ரோப் கார் வசதி செய்து தர வேண்டும் என கலசப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ பெ.சு.தி. சரவணன் தமிழக சட்டமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார். அப்போது ரோப் கார் வசதி செய்து தர சாத்தியக்கூறுகள் இல்லாத காரணத்தினால், பக்தர்களின் வசதிக்காக மாற்றுப்பாதை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யுமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அதன்படி கடந்த வாரம் எம்எல்ஏ சரவணன் தலைமையில்  அதிகாரிகள் பர்வத மலையில் ஆய்வு செய்தனர். இந்நிலையில் இன்று காலை மலை அடிவாரத்தில் இருந்து உச்சிவரை நவீன காமிராக்கள் மூலம் மாற்றுப்பாதை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து பணி மதிப்பீடு தயாரிக்கப்படும். பின்னர் வனத்துறையின் அனுமதி பெற்று நில அளவீடு செய்து மாற்றுப்பாதை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளது.  தங்களது நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மாற்றுப்பாதை அமைக்கும் பணி துரிதமாக நடந்து வருவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.