காஞ்சி, செங்கை, திருவள்ளூர் மாவட்ட பெருமாள் கோயில்களில் பரமபத வாசல் திறப்பு வைபவம்: ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

காஞ்சி/செங்கை/திருவள்ளூர்: வைகுண்ட ஏகாதேசியையொட்டி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பெருமாள் கோயில்களில் அதிகாலையில் பரமபத வாசல் திறக்கப்பட்டு, பெருமாள் எழுந்தருளினார். காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான வைகுண்ட பெருமாள் கோயிலில், வைகுண்ட ஏகாதேசியையொட்டி சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், அதிகாலை 4:30 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

இதையடுத்து, சிறப்பு மலர் அலங்காரத்தில் தேவி, பூதேவியுடன் வைகுண்ட பெருமாள் சயன கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சொர்க்க வாசல் பெருமாளை தரிசிப்பதற்காக ஏராளமான பக்தர்கள் அதிகாலையிலேயே கோயிலுக்கு வந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து சொர்க்க வாசல் வழியாக பெருமாளை தரிசித்தனர். இதனால், பேருந்து நிலையம் அருகேயுள்ள கிழக்கு ராஜவீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக, போலீஸார் போக்குவரத்து மாற்றங்களை மேற்கொண்டனர்.

மேலும், வைகுண்ட பெருமாள் கோயிலில் கருடசேவை உற்சவமும் நடைபெற்றது. நகரில் உள்ள நான்கு ராஜவீதிகளின் வழியாக சுவாமி வீதியுலா நடைபெற்றது. ஆங்காங்கே பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல், விளக்கடிகோயில் தெருவில் அமைந்துள்ள விளக்கொளி பெருமாள் கோயிலிலும் கருடசேவை உற்சவம் நடைபெற்றது. மேலும், வரதராஜ பெருமாள் கோயில் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோயிலில் சிறப்பு மலர் அலங்காரத்தில்
சொர்க்க வாசல் வழியாக ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் அருள்பாலித்தார்.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகரப்பகுதியில் அமைந்துள்ள கோதண்ட ராமர் கோயில், சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் உள்ள பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயில் மற்றும் திருவிடந்தை நித்தியக் கல்யாண பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சொர்க்க வாசல் வழியாக சென்று சுவாமியை தரிசித்தனர். இதனால், நகரப்பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று வருவதால், சொர்க்க வாசல் திறப்பு விழா நடைபெறவில்லை.

திருவள்ளூர்: திருவள்ளூர் வைத்திய வீரராகவர் பெருமாள் கோயிலில் இன்று அதிகாலை 5.20 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டு, ஸ்ரீதேவி பூதேவி சமேதராக உற்சவர் வீரராகவ பெருமாள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவள்ளூர் சத்தியமூர்த்தி தெருவில் உள்ள பத்மாவதி தாயார் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில்,

திருத்தணி பகுதியில் உள்ள விஜயலட்சுமி சமேத விஜயராகவ பெருமாள் கோயில், பேரம்பாக்கத்தை அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோயில், திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோயில் ஆகிய கோயில்களில் நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பு நடந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.