திருவனந்தபுரம்: கேரளாவில் அரசு மதுபான விற்பனைக் கழகத்தின் சில்லரை கடைகள் மூலம் இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மது வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் 320க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் உள்ளன. இந்த கடைகள் மட்டுமல்லாமல் நூற்றுக்கணக்கான கள்ளுக்கடைகளும் கேரளாவில் உள்ளன. கிறிஸ்துமஸ், புத்தாண்டு, ஓணம் உள்பட முக்கிய பண்டிகை நாட்களில் கேரளாவில் மது விற்பனை கொடி கட்டிப் பறக்கும். இந்த கிறிஸ்துமஸ், புத்தாண்டு தின கொண்டாட்டத்திலும் வழக்கம் போல மதுவிற்பனை அதிக அளவில் நடந்துள்ளது.
புத்தாண்டு தினமான நேற்று முன்தினம் மட்டும் ரூ.107.14 கோடிக்கு இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மது வகைகள் விற்பனையாகி உள்ளன. கடந்த வருடம் புத்தாண்டு தினத்தில் ரூ.95.67 கோடிக்கு விற்பனை நடந்தது. திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு கடையில் அதிகபட்சமாக ரூ.1.12 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது. நேற்று முன்தினம் வரை கடந்த 10 நாட்களில் மட்டும் ரூ.686.28 கோடிக்கு மது வகைகள் விற்பனையாகி உள்ளன. கடந்த வருட விற்பனை ரூ.649.32 கோடி ஆகும். இந்த ஆண்டு அனைத்து கடைகளிலும் ரம் வகை தான் அதிக அளவில் விற்பனை ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.