நெல்லை: நெல்லை அருகே கோபாலசமுத்திரத்தில் 8 அடி மலைபாம்பு நேற்று வலையில் சிக்கி பிடிபட்டது. நெல்லை அருகே கோபாலசமுத்திரம் விலக்கில் லெட்சுமணன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இதையொட்டி காணப்படும் கல்வெட்டான் குழியில் இருந்து வெளியேறிய ஒரு மலைபாம்பு தோட்டத்தை சுற்றிலும் போடப்பட்டிருந்த வலையில் சிக்கியது. அதில் இருந்து வெளியே வரமுடியாமல் உருண்டு புரண்டபடியே மலைபாம்பு கிடந்தது. இதை பார்த்த விவசாயிகள் நெல்லை வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
நெல்லை மாவட்ட வன அலுவலர் முருகன் உத்தரவின் பேரில், வனக்கால்நடை உதவி மருத்துவர் மனோகரன், வனக்கால்நடை ஆய்வாளர் அர்னால்டு, வேட்டை தடுப்பு காவலர்கள் வசந்த், ராஜேஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் கோபாலசமுத்திரம் சென்று பாம்பை பிடித்தனர். 8 அடி நீளம் கொண்ட பாம்பை கையில் எடுத்து பரிசோதித்த டாக்டர் உடம்பில் ரணங்கள் ஏதும் இல்லை என தெரிவித்தார். பின்னர் மலைபாம்பை பத்திரமாக சேரன்மகாதேவி காப்பு காட்டில் கொண்டு போய் விட்டனர்.