சாத்தூர்-தாயில்பட்டி சாலையில் வடமலாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சாமுண்டீஸ்வரி அம்மன், வெற்றி விநாயகர் ஆலயம் உள்ளது. இந்தக் கோயிலிலிருந்து சபரிமலைக்கு மாலையணிந்த பக்தர்கள் பலர் இருமுடிக்கட்டி கன்னி பூஜை நடத்தினர். இருமுடி பூஜைகள் முடிந்ததையடுத்து கோயில் பூசாரி பால்பாண்டி (வயது 60) கோயிலை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். இந்த நிலையில், வழக்கம்போல கோயிலை மீண்டும் திறப்பதற்காக பால்பாண்டி வந்துபோது கோயிலின் பூட்டு உடைக்கபட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். கோயிலின் உள்ளே சென்று பார்த்தபோது கோயில் உண்டியல் உடைக்கபட்டு அதிலிருந்த பணம் திருடு போயிருந்தது. மேலும் கோயிலில் இருந்த 4 குத்துவிளக்குகள், பூஜைமணி, தட்டு உள்ளிட்ட பூஜை பொருள்கள், மின்மோட்டார் உள்ளிட்டவையும், கோயிலுக்கு அருகே நிறுத்தியிருந்த டிராக்டரில் பேட்டரியையும் மர்மநபர்கள் திருடிச்சென்றுள்ளது தெரியவந்தது.
இந்த திருட்டு சம்பவம் குறித்து சாத்தூர் நகர் போலீஸூக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் மேப்பநாய் உதவியுடன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மோப்பம் பிடித்தப்படியே சிறிது தூரம் ஓடிச்சென்று நாய் அதன்பின் நின்றுவிட்டது. யாரையும் கவ்விபிடிக்கவில்லை. இதையடுத்து, தடயவியல் குழுவினர் வரவழைக்கபட்டு ஆய்வு நடத்தி தடயங்கள் சேகரிக்கப்பட்டன. திருட்டுச் சம்பவம் தொடர்பாக போலீஸில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் சாத்தூர் நகர் போலீஸார் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் வீடுகள் மற்றும் முக்கிய இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றியும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக அந்தப் பகுதி மக்கள், “கோயில் குத்து விளக்கைக்கூட விட்டு வைக்காம, திருடிட்டு போயிருக்காங்க. போலீஸ் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு இந்த மாதிரி திருட்டுச் சம்பவங்களை தடுக்கணும்” என்றனர்.
ஏற்கெனவே கடந்த சில நாள்களுக்கு முன்னர் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்த கடைகளில் மேற்கூரையை உடைத்து கல்லாப்பெட்டியில் இருந்த பணம் மற்றும் கடையில் இருந்த மதிப்புமிக்க பொருள்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மீண்டும் அதே பாணியில் கோயிலின் பூட்டை உடைத்து உண்டியல் பணம், குத்துவிளக்கு, மின்மோட்டார், டிராக்டர் பேட்டரி என அடுத்தடுத்து திருடுப்போயிருக்கும் சம்பவம் சாத்தூர் சுற்று வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.