ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையத்தில் பயிற்சிக்காக சென்ற சுபஸ்ரீ என்ற பெண் உயிரிழப்பு வழக்கில் மார்க்சிஸ்ட் எம்பி பீகர் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார்.
மர்மமான முறையில் உயிரிழந்ததாக சுபஸ்ரீயின் உடல் அவரது வழக்கத்துக்கு மாறாக எரிக்கப்பட்டது ஏன் என்றும், பாஜகவை வைத்து ஈஷா யோகா மிரட்டல் விடுத்து இருப்பதாக கோவை மார்க்சிஸ்ட் எம்பி பி.ஆர்.நடராஜன் குற்றம்சாட்டி இருக்கிறார்.
திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்த பழனிகுமார் என்பவரின் மனைவி சுபஸ்ரீ கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி காலை யோகா பயிற்சியில் ஈடுபட ஜக்கி வாசுதேவியின் ஈஷா யோகா மையத்துக்கு சென்று இருக்கிறார்.
அதை தொடர்ந்து அங்கு நடைபெற்ற யோகா பயிற்சி வகுப்பில் பங்கேற்ற அவர், வெளியில் வராததால் அதிர்ச்சியடைந்த கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அங்கு பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது சுபஸ்ரீ கால் டாக்ஸியில் ஏறி சென்றது தெரியவந்தது.
கால் டாக்ஸி ஓட்டுநரை விசாரணை செய்தபோது சுபஸ்ரீயை இருட்டுப்பள்ளம் அருகே இறக்கிவிட்டு சென்றது தெரியவந்து இருக்கிறது. அப்பகுதியில் பெண் ஒருவர் ஓடிச்செல்வதை போன்ற காட்சி பதிவானது.
இது தொடர்பாக பழனிகுமார் ஆலாந்துறை காவல் நிலையத்தில் புகாரளித்து உள்ளார். இதையடுத்து போலீசார் 6 தனிப்படை அமைத்து சுபஸ்ரீயை தேடினர். இந்த நிலையில் செம்மேடு பகுதியை சேர்ந்த கோவிந்தராஜின் தோட்டத்தில் இருக்கும் கிணற்றில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மிதப்பதாக ஆலாந்துறை போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
அங்கு சென்ற பழனிகுமார், அது சுபஸ்ரீயின் உடல் என்பதை உறுதி செய்தார். இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக தமிழக அரசு தகுந்த விசாரணை நடத்த வேண்டும் என கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் பங்கேற்ற கோவை மார்க்சிஸ்ட் எம்பி பி.ஆர்.நடராஜன். “சிசிடிவி காட்சியில் சுபஸ்ரீ பதற்றத்துடன் யோகா உடையில் ஓடி செல்வதை பார்க்க முடிந்தது. ஒரு வாரமாக அங்கிருந்த சுபஸ்ரீ க்கு என்ன பிரச்சனை ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசார் 6 தனிப்படை அமைப்பு 13 நாளாக தீவிர விசாரணை நடத்தினார்கள்.
அவரது உடலை அவசர அவசரமாக பிரேத பரிசோதனை செய்து குடும்ப வழக்கத்துக்கு மாறாக எரியூட்டியது கோவை மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தொடர்ந்து ஈஷாவில் இப்படி மர்ம மரணங்கள் நடந்துகொண்டே உள்ளன. மாநில அரசு இதனை உடனடியாக குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்றார்.
newstm.in