புதுடெல்லி: நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசனுடன், ராகுல் காந்தி நேற்று உரையாடினார். அந்த வீடியோவையும் ராகுல் வெளியிட்டுள்ளார். அந்த உரையாடலின் போது ராகுல் காந்தி கூறியதாவது:
இந்திய – சீன எல்லைப் பிரச்சினை என்பது, இந்தியாவுக்குள் உள்ள பிரச்சினைகளுடன் தொடர்புடையது. இந்திய பொருளாதாரம் வலுவிழந்துள்ளது. எந்த தொலைநோக்கமும் இல்லை, வெறுப்புணர்வு, கோபம் போன்றவை நிலவுகின்றன. மேற்கத்திய நாடுகளுடன் வலுவான உறவை உக்ரைன் வைத்துக் கொள்வதை நாங்கள் விரும்பவில்லை என்று ரஷ்யா கூறுகிறது. அதற்காக உக்ரைனின் எல்லைகளை மாற்றிஅமைப்பதாய் கூறுகிறது. அதேபோலதான், இந்தியாவில் உள்நாட்டில் நிலைமை சரியில்லாததை சாதகமாக்கிக் கொண்டு, எல்லையில் சீனா ஊடுருவல் நடத்துகிறது. இந்திய எல்லையை மாற்றி அமைக்க சீனா தாக்குதல் நடத்தக் கூடும்.
நாங்கள் லடாக்கில் நுழைவோம், அருணாச்சலில் நுழைவோம் என்று சீனர்கள் சொல்கிறார்கள். 21-ம் நூற்றாண்டில் பாதுகாப்பு என்பது உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. நாட்டில் ஒற்றுமை நிலவவேண்டும். அமைதி நிலவ வேண்டும். இந்தியாவுக்கு தொலைநோக்கு பார்வை வேண்டும். அதற்காக போருக்கு செல்ல வேண்டும் என்பதல்ல. உங்களை யாரும் தொட முடியாத அளவுக்கு இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்.
இந்தியாவில் நல்லிணக்கம் இல்லை. இந்தியன், இந்தியன் மீது தாக்குதல் நடத்துகிறான். அதனால்தான் நாங்கள் (சீனா) எல்லையை ஆக்கிரமிப்போம், என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்ற நிலைக்கு சீனா வருகிறது. இதுகுறித்து பேச வேண்டும் என்று மத்திய அரசை எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஊடகங்களிடம் பேசாவிட்டால் கூட, எதிர்க்கட்சிகளிடமாவது பேசுங்கள் என்கிறோம். அப்படி மத்திய அரசு பேசினால் நாங்கள் உதவி செய்ய முடியும். ஆலோசனைகள் வழங்க முடியும். ஆனால், எங்கள் பேச்சை அவர்கள் கேட்க தயாராக இல்லை. இந்தியாவின் 2,000 கி.மீ. பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளது. இதை நாங்கள் சொல்லவில்லை. சீனா நமது பகுதியில் உள்ளது என்று நம்முடைய ராணுவம்தான் சொல்கிறது. ஆனால், யாரும் வரவில்லை என்று பிரதமர் மோடி சொல்கிறார். இந்த முரண்பாட்டால், நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இந்தியா அதற்கு பதில் நடவடிக்கை எடுக்காது என்று சீனா நினைக்கிறது. இவ்வாறு ராகுல் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.