புதுடெல்லி: இந்தியாவை சுயசார்பு உடைய நாடாக உருவெடுக்கச் செய்வதை இந்திய அறிவியல் சமூகம் இலக்காக கொண்டு செயல்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் 108-வது இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாட்டை பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் ‘அறிவியல், தொழில்நுட்பம் மூலம் பெண்கள் மேம்பாட்டுடன் கூடிய நிலையான வளர்ச்சி’ என்ற தலைப்பில் பேசியதாவது:
அறிவியலில் வளர்ச்சி என்பது இந்தியாவின் தேவைகளை பூர்த்தி செய்வதை நோக்கமாக கொண்டிருக்க வேண்டும்.
நாட்டில் எரிசக்திக்கான தேவை அதிகரித்து வருகிறது. அந்த துறையில் பயனளிக்கும் வகையில் அறிவியல் கண்டுபிடிப்புகளை நாம் உருவாக்க வேண்டும்.
உலக மக்கள்தொகையில் 17-18 சதவீதம் பேர் இந்தியாவில் வசிக்கின்றனர். எனவே, இவ்வளவு பெரிய மக்கள்தொகையில் ஏற்படும் முன்னேற்றம் உலக வளர்ச்சியின் எழுச்சிக்கும் வழிவகுக்கும்.
உலகளாவிய அறிவியல் கண்டுபிடிப்பு குறியீட்டில் கடந்த 2015-ம் ஆண்டில் 81-வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 40-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அறிவியல் கண்டுபிடிப்பு முயற்சிகள் பெரிய சாதனைகளாக மாறும்போது, அது நிஜ வாழ்க்கையிலும் பெரிய மாற்றத்தை உருவாக்கும்.
அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்துக்கு நம் நாட்டின் அறிவியல் திறன் மிக முக்கியமானது. 21-ம் நூற்றாண்டில் இந்தியாவின் தகவல், தொழில்நுட்ப வளர்ச்சி பிரமிக்கத்தக்க வகையில் உள்ளது.
உலக அளவில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் வளர்ச்சியில் முதல் 3 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.
ஜி-20 தலைமைத்துவத்தை இந்தியா ஏற்றிருப்பதன் பின்னணியில், பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சிறு, குறு தொழில் துறையாக இருந்தாலும், பெரிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பாக இருந்தாலும் பெண்களின் ஆளுமைத் திறன் சிறந்து வெளிப்படுகிறது. அறிவியலில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது.
அறிவியல் தொழில்நுட்பம் மூலம் மிக நுட்பமான உபகரணங்களை இந்தியாவிலேயே உற்பத்திசெய்ய வேண்டும். புதிய நோய்களை தீர்க்கும் வழிமுறைகளைகண்டறிய வேண்டும். உயிரி தொழில்நுட்பவியலின் உதவியுடன் சிறுதானியங்கள் அறுவடைக்குப் பிந்தைய செலவினங்களை குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.