பிரபல உணவு டெலிவரி நிறுவனமான சொமட்டோவின் பங்கு இன்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில் சரிவில் இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் சொமட்டோ உணவு நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரி குஞ்சன் பட்டிதார் பதவியிலிருந்து விலகியதுதான் என்று கூறப்படுகிறது.
குஞ்சன் பட்டிதார் பதவி விலகிய தகவலை நிறுவனம் அதிகாரபூர்வமாக வெளியிட்டதும் சொமட்டோ நிறுவனத்தின் பங்கு விலை 2.3 சதவிகிதம் அளவுக்குச் சரிந்து ரூ.58.85 எனும் விலையில் வர்த்தகமானது.
நியூ ஏஜ் பிசினஸ் என்ற பிரிவில் வரும் ஆன்லைன் உணவு டெலிவரி பிசினஸில் இந்தியாவில் ஸ்விக்கி, சொமட்டோ இரண்டும்தான் முன்னணி போட்டியாளர்களாக உள்ளன. கடந்த டிசம்பர் 31 அன்று ஒரே நாளில் மட்டும் இந்த இரண்டு நிறுவனங்களில் மட்டும் 5 லட்சம் ஆர்டர்கள் குவிந்தன.
சொமட்டோவின் வளர்ச்சியில் கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக குஞ்சன் பட்டிதாரின் பங்கு இருந்து வருகிறது. இந்நிறுவனத்தின் முக்கிய பலமான தொழில்நுட்பத்தின் தலைமை பொறுப்பில் இவர்தான் இருந்து வழி நடத்தி வந்தார்.
இந்நிலையில் இவர் தன்னுடைய பதவியிலிருந்து விலகி இருப்பது நிறுவனத்துக்கு எதிராக அமைந்துள்ளது. கடந்த நவம்பர் மாதத்திலிருந்தே இந்நிறுவனத்தின் மூத்த பதவியில் இருந்த அதிகாரிகள் சிலர் பதவி விலகினர். குறிப்பாக மோகித் குப்தா, ராகுல், சித்தார்த் ஜவஹர் ஆகியோரைத் தொடர்ந்து இப்போது குஞ்சன் பட்டிதார் பதவி விலகி உள்ளார்.
மாறிவரும் இன்றைய வாழ்க்கை முறையில் ஆன்லைன் உணவு டெலிவரி பல வகைகளிலும் வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள துறையாக இருக்கின்றது. ஆனாலும் இந்தத் துறை சார்ந்த நிறுவனங்கள் லாபம் ஈட்டுவது என்பது மிகவும் கடினமான காரியமாக இருக்கிறது. எனவே முதலீட்டாளர்கள் இந்த வகை நிறுவனப் பங்குகளில் கவனமாக இருக்க வேண்டும் என்றே நிபுணர்கள் கூறுகின்றனர்.