வியன்னா: ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவுக்கு அரசு முறை பயணமாக சென்ற மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அங்குள்ள இந்திய வம்சாவளியினர் மத்தியில் நேற்று முன்தினம் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: உக்ரைன் போர் தொடங்கிய போதே பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பலமுறை போர் நிறுத்தம் குறித்துபேசியுள்ளார். நானும் இருநாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளேன். இரு நாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்கினால் தீர்வை எட்ட முடியும். இந்தியாவின் வடக்கு எல்லைப் பகுதியில் சீனாவின் சவாலை எதிர்கொண்டு வருகி றோம். இதேபோல பாகிஸ்தானின் எல்லை தாண்டிய தீவிரவாத பிரச்சினையையும் சமாளித்து வருகிறோம்.
ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றிருக்கிறது. இது மிகப்பெரிய பணி. உலகின் சக்திவாய்ந்த 20 நாடுகளை ஒன்றிணைத்து செல்ல வேண்டும். அடுத்த ஓராண்டில் இந்தியாவின் 55 -க்கும் மேற்பட்ட நகரங்களில் ஜி20 மாநாடுகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். அப்போது இந்தியாவின் பன்முகத்தன்மையை உலகுக்கு பறைசாற்றுவோம். நாட்டின் கலாச்சாரம், சிறப்பு உணவு வகைகள், உள்ளூர் பொருட்கள் உலகுக்கு காட்சிப்படுத்தப்படும்.
சிறுதானியங்கள்…
இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று இந்த ஆண்டு சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக ஐ.நா. சபை அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் கோதுமைக்கான தேவை அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் உலகின் உணவுப் பற்றாக்குறையை சமாளிக்க சிறுதானியங்கள் முக்கிய பங்கு வகிக்கும். இவ்வாறு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.