திகார் சிறையில் கைதிக்கு பாலியல் வன்கொடுமை? அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

திகார் சிறையில் உள்ள கைதிகள் மீதான பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாக டெல்லி அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திகார் சிறையில் சக கைதிகளால் 22 வயது கைதியொருவர், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக டிசம்பர் 30-ம் தேதியன்று தகவல் வெளியானது. இதையடுத்து, இவ்விவகாரத்தில் தானாக முன்வந்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் டெல்லி அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்நிலையில் குறிப்பிட்ட கைதிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாலியல் துன்புறுத்தல் புகார் உண்மையாக இருந்தால், அது பாதிக்கப்பட்டவரின் வாழ்வுரிமை மற்றும் கண்ணியத்தை மீறும் செயல் என NHRC கடுமையாக தெரிவித்துள்ளது.
இது குறித்து டெல்லி தலைமைச் செயலாளர் மற்றும் சிறைத்துறை இயக்குநர் ஜெனரல் ஆகியோருக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸில், “இந்த விவகாரம் தொடர்பாக நான்கு வாரங்களுக்குள் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவரின் தற்போதைய உடல்நிலை, தவறு செய்த அதிகாரிகள் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட கைதிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க எடுக்கப்பட்ட மற்றும் எடுக்கப்படும் நடவடிக்கைகள் ஆகியவை அந்த அறிக்கையில் சேர்க்கப்பட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
image
மேலும் இவ்விவகாரத்தில் சிறை நிர்வாகத்தின் பல அம்சங்களை மேம்படுத்த கடந்த காலங்களில் பல வழிகாட்டுதல்கள், ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்கியுள்ளதாக NHRC கூறியுள்ளது. ஆனால், இவை கடைப்பிடிப்பதில்லை என தெரிகிறது. அதனாலேயே சிறைக்குள் துன்புறுத்தல், சித்திரவதை மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் உள்ளிட்ட அவர்களின் மனித உரிமை மீறல்கள் குறித்து தொடர்ந்து புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. சிறைகளில் உள்ள கைதிகளின் பாதுகாவலராக இருக்கும் அரசுதான், அவர்களின் பாதுகாப்பிற்கு பொறுப்பாகும் என்று தெரிவித்துள்ளது NHRC.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.