மன உளைச்சலுக்கு ஆளான பெண் காவலர் விடுப்பில் சென்றார்..!!
திமுகவின் பொது கூட்டத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக நிர்வாகிகள் மீது கொடுக்கப்பட்ட புகாரை பெண் காவலர் வாபஸ் பெற்றுள்ளார். மன உளைச்சலுக்கு ஆளான பெண் காவலர் விடுப்பு எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்கு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை தசராபுரம் பேருந்து நிறுத்தத்தில் மறைந்த திமுகவின் பொதுச் செயலாளர் அன்பழகனின் நூற்றாண்டு நினைவு விழா பொதுக்கூட்டம் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி நடைபெற்றது. இதில் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிந்த பின் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலரிடம் இரண்டு இளைஞர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர்.
பெண் காவலர் கதறி அழுவதை பார்த்த சக போலீசார் இரண்டு இளைஞர்களையும் மடக்கி பிடித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் திமுகவின் நிர்வாகிகளான பிரவீன் மற்றும் ஏகாம்பரம் என்பது தெரியவந்தது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முயற்சி எடுத்த பொழுது அங்க வந்த விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா பாலியல் சீண்டலில் ஈடுபட்ட திமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார்.
திமுக எம்எல்ஏ வாக்குவாதம் செய்து கொண்டிருக்கும் பொழுதே பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இரு திமுக நிர்வாகிகளும் தப்பியைச் சென்றனர். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் காவலர் திமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட திமுகவினர் மீது பெண் காவலர் அளித்த புகார் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் பாலியல் சீண்டலுக்கு ஆளான பெண் காவலரை திமுக எம்எல்ஏ பிரபாகர் ராஜா தலைமையிலான திமுகவினர் மிரட்டி புகாரை திரும்ப பெற செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில் திமுக நிர்வாகிகள் பாலியல் சீண்டலுக்கு ஆளான பெண் காவலர் தற்பொழுது நீண்ட விடுப்பு எடுத்து சொந்த ஊருக்கு சென்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தையே உலுக்கிய இச்சம்பவத்தில் பெண் காவலரே புகாரை திரும்பப்பெற்ற நிகழ்வு அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் திமுக ஆட்சியில் நிலவுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.