திருப்புவனம்: திருப்புவனம் அருகே 46வது ஆண்டாக பெண் சாமியார் முள் படுக்கையில் படுத்து அருள்வாக்கு கூறினார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே லாடனேந்தலில் பூங்காவனம் முத்துமாரியம்மன் மற்றும் மாசாணி அம்மன் கோயிலை பெண் சாமியார் நாகராணி அம்மையார், மாரிமுத்து சுவாமிகள் நிர்வகித்து வருகின்றனர். பெண் சாமியார் 46வது ஆண்டாக நேற்று முள் படுக்கையில் படுத்து அருள்வாக்கு கூறினார். இதற்காக 48 நாள் விரதம் முடிந்து, கோயில் வாசலில் கருவை முள், உடைமுள், இலந்தை முள், கத்தாழை முள், சப்பாத்தி கள்ளி உட்பட பல்வேறு வகையான முட்களால் 6 அடி உயரத்தில் 10 அடி அகலத்திற்கு அமைக்கப்பட்ட முள் படுக்கையில் ஏறி நின்றபடி அவர் ஆடியபடியே சில பக்தர்களுக்கு அருள்வாக்கு சொன்னார். சற்று நேரத்தில் மயங்கியபடியே முள் படுக்கையில் படுத்தார். மூன்று மணி நேரம் முள் படுக்கையில் படுத்து தவம் செய்தார். அதனை தொடர்ந்து அன்னதானம் நடந்தது. இதில் சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், திண்டுக்கல் உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.