”நம் நாட்டை ஆண்ட பிரிட்டனையே பின்னுக்கு தள்ளிவிட்டோம்” – ஜே.பி.நட்டா சொல்வது என்ன?

200 ஆண்டுகளாக நம்மை ஆண்ட பிரிட்டனை பின்னுக்குத்தள்ளி,  உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறியுள்ளது என ஜே.பி. நட்டா கூறியிருக்கிறார்.

2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் பாஜகவுக்கு சவாலாக இருக்கும் தொகுதிகளை கண்டறிந்து, அங்கு மக்களை சந்திக்கும் ‘விஜய் சங்கல்ப்’ நிகழ்ச்சியை அந்த கட்சி நடத்தி வருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலம் சந்திராப்பூர் தொகுதியில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பாஜக தலைவர் ஜே.பி. நட்டா கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், “பாதகமான சூழ்நிலையிலும் பிரதமர் மோடி இந்தியாவை முன்னோக்கி கொண்டு செல்கிறார். மோடியின் தலைமையில், எஃகு உற்பத்தி, மொபைல் உற்பத்தி, மருந்து, ரசாயனம் என அனைத்து துறைகளிலும் இந்தியா முன்னேறியுள்ளது. மோடியின் இந்த கொள்கைகளால், உலகமே இந்தியாவை வேறு கண்ணோட்டத்தில் பார்க்கிறது. உலகில் பல்வேறு நாடுகளின் பொருளாதரம்  வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், இந்தியாவின் பொருளாதாரம் வலுவாக முன்னேறி வருகிறது.

image
200 ஆண்டுகளாக நம்மை ஆண்ட பிரிட்டனை பின்னுக்குத்தள்ளி, இப்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறியுள்ளது. தற்போது அமெரிக்காவும், ரஷ்யாவும் பணவீக்கத்தை சந்தித்து வருகின்றன. இருப்பினும், பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டுவந்து, பொருளாதாரத்தின் வலுவான அடித்தளத்தை இந்தியா உருவாக்கி வருகிறது.
இன்று, இந்தியா உலகின் இரண்டாவது பெரிய எஃகு உற்பத்தி செய்யும் நாடாக மாறியுள்ளது. 2014ஆம் ஆண்டில் 52 சதவீத மொபைல் போன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டன. இன்று 97 சதவீத மொபைல் போன்கள் உள்நாட்டில் தயாரிக்கப்படுகின்றன. அமெரிக்காவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் பணி இன்னும் முழுமையடையவில்லை. அதேவேளையில் இந்தியாவில் 220 கோடி தடுப்பூசி நிர்வகிக்கப்பட்டுள்ளன.
காங்கிரஸ் ஆட்சியில் காசநோய் மற்றும் போலியோ போன்ற நோய்களுக்கான தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வருவதற்கு பல ஆண்டுகள் ஆனது. ஆனால் பிரதமர் மோடி, கொரோனா பரவிய 9 மாதங்களில் இரண்டு கொரோனா தடுப்பூசிகளைக் கொண்டு வந்தார். கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் இலவச உணவு தானியங்கள் போன்ற அவரது கொள்கைகள் நாட்டில் தீவிர வறுமையை ஒரு சதவீதத்திற்கும் குறைவாகக் குறைத்தது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசை இந்திய மக்கள் தங்களது ‘அதிர்ஷ்டமாக’ கருத வேண்டும்” என்று கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.