ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதாவது வெளியில் இருந்து உணவுப் பொருட்கள் மற்றும் குடிநீர் பானங்கள் தண்ணீர் மற்றும் இதர குளிர்பானங்கள் கொண்டு செல்ல தியேட்டர்கள் அனுமதி மறுப்பது தொடர்பாக பொதுநல வழக்காக தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கானது இன்றைய தினம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் மற்றும் நீதிபதி நரசிம்மா அமர்வில் விசாரணைக்கு வந்த போது, நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். குறிப்பாக, மனுதாரர் தரப்பில் வழக்கை பொறுத்தவரைக்கும் திரையரங்கில் குடிநீரை வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டிருக்கிறது. குடிநீரெல்லாம் வழங்கப்படுகின்றன. ஆனால் உணவுகள் எல்லாம் கொண்டு செல்வதற்கு அனுமதி மறுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு பாதுகாப்பு காரணங்கள் சொல்லப்படுவதாகவும், மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள், திரையரங்கு என்பது தனி நபருக்கு சொந்தமான இடம். அந்த இடத்தில் என்ன விதிமுறைகளை வகுக்க வேண்டும்? என சட்டதிட்டங்களுக்குட்பட்டு அவர்கள்தான் முடிவெடுப்பார்கள். அதில் நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. தனிநபர் சொத்து சார்ந்த இடத்தில் அவர்கள் பிறப்பிக்கும் உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.
இறுதியாக உத்தரவை பொருத்தவரைக்கும் வெளியில் இருந்து உணவுப் பொருட்கள் மற்றும் குடிநீர் உள்ளிட்ட பானங்களை கொண்டு செல்வதற்கு தடை விதிப்பதற்கு திரையரங்குகளுக்கு உரிமை இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்கள். அதே நேரத்தில், இலவசமாக குடிநீர் திரையரங்கில் வழங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. அதேபோல குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கு பெற்றோருக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.