“பாட்டாளி மக்கள் கட்சியினர் மக்கள் பிரதிநிதிகள் ஆனது குறித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் கருத்து குறித்து எடப்பாடி பழனிசாமிதான் விளக்கம் அளிக்க வேண்டும்” என பாமக செய்தி தொடர்பாளர் கே.பாலு தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்துக்கு வெளியில் செய்தியாளர்களை சந்தித்த பாமக செய்தி தொடர்பாளரும், வழக்கறிஞருமான கே.பாலு, “1996ல் நான்கு எம்.எல்.ஏ.க்களுடன் அதிமுக பலவீனப்பட்டு இருந்த நிலையில், அப்போது அக்கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா, பாமக அலுவலகத்திற்கு வந்து கூட்டணி பேசி 1999 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை சந்தித்தார். இப்படி அதிமுக விழும்போதெல்லாம் பாமக தோள்கொடுத்துள்ளது. அதிமுகவின் வெற்றிக்கு பாமக தான் காரணம் என எப்போதும் சொல்லிக்காட்டியதில்லை.
மைனாரிட்டி திமுக என அதிமுக-வால் விமர்சிக்கப்பட்டபோது கூட, எவ்வித நிபந்தனையும் இல்லாமல் திமுக-விற்கு ஆதரவு அளித்து தலைவராக இருந்த கருணாநிதி முதல்வராக நாங்கள் தான் காரணம் என சொல்லியதில்லை. பாமக-விற்கு இடம் ஒதுக்கியது கூட்டணி தலைவர்களின் முடிவாக இருக்கும்போது, அதுகுறித்து பேச ஜெயக்குமார் யார்? நுனி மரத்தில் அமர்ந்துகொண்டு அடிமரத்தை வெட்டுவது போல ஜெயக்குமார் பேசி இருக்கின்றார். கூட்டணி குறித்து பேசுவதற்கான நேரம், தருணம், சூழல் தற்போது இல்லை. தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்னர்தான் முடிவெடுக்கப்படும்.
அதிமுக கருத்தை தான் ஜெயக்குமார் கூறினாரா என்பதை எடப்பாடி பழனிசாமியிடம் ஊடகங்கள் தான் உறுதிபடுத்த வேண்டும். எடப்பாடி பழனிசாமி 2 ஆண்டுகள் முதல்வராக ஆட்சியை தொடர்ந்ததற்கும், ஜெயகுமார் அமைச்சராக தொடர்ந்ததற்கும் நாங்கள் தான் காரணம் என்பதை எப்போதும் நாங்கள் சொல்லியதில்லை.
அதிமுக வீழ்ந்த போதெல்லாம் உயிர் கொடுத்த பாமகவின் செயல்பாடுகளை எப்போதும் அதிமுக மறக்க கூடாது. ஜெயக்குமார் கருத்து குறித்து எடப்பாடி பழனிசாமிதான் விளக்க வேண்டும்.
மக்களுக்கு தேவையானவற்றை ஆட்சியாளர்களிடம்; பெறும் பணியை பாமக தொடர்ந்து செய்தது” என்று தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM