பாட்னா: பாஜக கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் வெளியே வந்தது ஏன் என்பது குறித்து பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
பிஹாரில் மாநிலம் தழுவிய யாத்திரையை நிதிஷ் குமார் வரும் 5-ம் தேதி தொடங்க இருக்கிறார். மகாத்மா காந்தியால் தோற்றுவிக்கப்பட்ட பிட்டிஹார்வா காந்தி ஆசிரமத்தில் இருந்து இந்த யாத்திரை தொடங்க இருக்கிறது. இதை முன்னிட்டு, பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ் குமார், ”இந்த யாத்திரை மூலம் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று மக்களை சந்திக்க இருக்கிறேன். எனது யாத்திரையை பாஜக விமர்சிக்கிறது. அவர்கள் நாட்டுக்காக பணியாற்றவில்லை; சுயநலத்துக்காகவே பணியாற்றினார்கள். அதன் காரணமாகவே அவர்களுடனான கூட்டணியை எங்கள் கட்சி முறித்துக்கொண்டது” என்று குறிப்பிட்டார்.
பிஹாரில் மகாகத்பந்தன் கூட்டணி தற்போது ஆட்சியில் இருக்கிறது. இந்தக் கூட்டணிக்கு ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமை வகிக்கிறது. தற்போதைய சட்டப்பேரவையில் இந்த கட்சிக்கு 79 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 45 உறுப்பினர்கள் மட்டுமே இருக்கிறார்கள். எனவே, முதல்வர் பதவியை ராஷ்ட்ரீய ஜனதா தளத்திற்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என்றும், முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ் குமார் விலக வேண்டும் என்றும் அக்கட்சியினர் கூறி வருகின்றனர். தற்போது துணை முதல்வராக இருக்கும் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவை, முதல்வராக்க அவரது கட்சியினர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அடுத்தத் தேர்தலின்போது முதல்வர் பதவிக்கு தான் போட்டியிடப் போவதில்லை என நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். எனினும், அடுத்த சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 2025-ம் ஆண்டு அக்டோபர் – நவம்பரில்தான் தேர்தல் நடைபெறும் என்பதால், தற்போதே நிதிஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று தேஜஸ்வி யாதவ் ஆதரவாளர்கள் கூறி வருகிறார்கள். இதனால் எழுந்துள்ள அழுத்தம் காரணமாகவே, நிதிஷ் குமார் யாத்திரையை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.