சுற்றுலா மாநிலமான புதுச்சேரி, வார இறுதி நாள்களில் சுற்றுலாப் பயணிகளால் நிறைந்திருக்கும். அதிலும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற நாள்களில் நகரமே ஸ்தம்பித்துவிடும் அளவுக்கு பல மாநிலங்களில் இருந்து சுற்றுலாப்பயணிகள் குவிந்துவிடுவார்கள். ஆனால் கொரோனா தொற்று காரணமாக புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம் கடந்த இரண்டு ஆண்டுகள் பெரிதாக கொண்டாடப்படவில்லை. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் பெரிதாக இல்லை என்பதால், கிறிஸ்துமஸ் முதலே கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் குவிய ஆரம்பித்தனர். அறைகளின் வாடகைக் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தின தனியார் விடுதிகள். அப்படியும் அறைகள கிடைக்காததால் புதுச்சேரியை ஒட்டிய தமிழகப் பகுதிகளில் தஞ்சமடைந்தனர் சுற்றுலாப்பயணிகள்.
புதுச்சேரிக்கு சுற்றுலா மூலம் கிடைக்கும் வருவாய்தான் பிரதானமானது என்பதால், சுற்றுலாப்பயணிகளை கவர்வதற்கு சுற்றுலாத்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன் ஒரு பகுதியாக டெண்டர் மூலம் கடற்கரை பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்சிகளை நடத்திக்கொள்ள தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியது சுற்றுலாத்துறை. அதன்படி புதுச்சேரி – கடலூர் சாலையில் இருக்கும் சுண்ணம்பு ஆறு அரசு படகுக் குழாமில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியை நடத்துவதற்கு ‘ரெஜி கோட்டிங் சிஸ்டம் பிரைவேட் லிமிடெட் (Rege Coating System Pvt. Limited) என்ற சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு அனுமதி கொடுத்திருந்தது சுற்றுலாத்துறை. ஒரு டிக்கெட்டை ரூ.2,000/- முதல் ரூ.25,000/- வரை பல பிரிவுகளில் விற்ற இந்த நிறுவனம், பாரடைஸ் பீச்சுக்கு வாடகையாக ரூ.5,75,000/-ம், படகு சேவைக்கு தனியாக ரூ.5,00,000/- செலுத்தியிருக்கிறது.
புக்கிங் டாட்காம், பேடிஎம் மூலம் டிக்கெட்டுகளை விற்ற இந்த நிறுவனம், டிக்கெட் வாங்கியவர்களை படகில் பாரடைஸ் பீச்சுக்கு அழைத்துச் சென்று, டிக்கெட்டின் விலைக்கு ஏற்ப அசைவ உணவு, மது போன்றவை வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது. ஆன்லைனில் புக்கிங் என்பதால் பாரடைஸ் பீச்சின் கொள்ளளவைவிட அதிகமான டிக்கெட்டுகள் விற்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. அதனால் ஒரேநேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் டிக்கெட்டுகளுடன் அங்கு குவிந்தனர். நிகழ்ச்சியை நடத்திய நிறுவனம் சுற்றுலாப்பயணிகளை ஒழுங்குபடுத்துவதற்கான நடவடிக்கையை முறையாக மேற்கொள்ளாததால், டிசம்பர் 31-ம் தேதி மாலை டிக்கெட்டுகளுடன் அங்கு சென்ற பயணிகள் படகுக் குழாமின் உள்ளேயும், கேட்டுக்கு வெளியேயும் சுமார் 5 மணி நேரம் காத்துக் கிடந்தனர். அதனால் புதுச்சேரி கடலூர் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த சொதப்பலால் தடுமாறிபோன காவல்துறை, உடனே சுதாரித்துக்கொண்டு போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டுவந்தது. இதையெல்லாம் தாண்டி பாரடைஸ் பீச்சுக்கு சென்ற சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்குவதாக்கூறிய தண்ணீர், உணவு, ட்ரிங்ஸ் எதுவும் வழங்கப்படவில்லை. அதனால் அங்கிருந்த படகுக் குழாம் ஊழியர்களிடம் சுற்றுலாப்பயணிகள் கடும் வாக்கவாதத்தில் ஈடுபட்டதால் அந்த இடமே கலவர பூமியாக காட்சியளித்தது. அவர்களுக்கு பதிலளிக்க வேண்டிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஒதுங்கிக்கொள்ள, போலீஸாரிடம் சுற்றுலாப் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட ஆரம்பித்தனர்.
நம்மிடம் பேசிய பெங்களூரைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர், “நாங்கள் ஆன்லைனில் புக் மை ஷோவில் டிக்கெட் புக்கிங் செய்துவிட்டு வந்தோம். இவர்கள் முதல் முறை இப்படியான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். 5 தம்பதியினர் வந்திருக்கிறோம். ஒரு தம்பதியினருக்கு ரூ.3,800/- என 5 பேர் ரூ.19,000/- கொடுத்து வந்து 5 மணி நேரம் காத்திருக்கிறோம்” என்றார்.
அதேபோல சென்னையைச் சேர்ந்த மற்றொரு சுற்றுலாப்பயணி, “இது முழுக்க முழுக்க ஸ்கேம். மக்களை முட்டாளாக்கியிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான மக்களிடம் பணத்தை வாங்கிவிட்டு தண்ணீர், சாப்பாடு என எதுவுமே கொடுக்கவில்லை. அதுபற்றி கேட்பதற்குக் கூட அங்கு ஆளில்லை. இவ்வளவு பேரிடம் பணத்தை வாங்கிக்கொண்டு, நிகழ்ச்சிக்கான ஆர்கனைசிங் கமிட்டி கூட அமைக்காமல் ஏமாற்றிவிட்டார்கள்” என்றார்.
பெங்களூருவில் இருந்து வந்திருந்த இன்னொருவர், “மாலை 7 மணிக்கு வந்தோம். ஆனால் 11 மணிக்குத்தான் பாரடைஸ் பீச்சுக்கே எங்களை அழைத்துச் சென்றார்கள். 2,000/- ரூபாய்க்கு இலவச உணவு, மது தருவோம் என்று கூறியிருந்தார்கள். ஆனால் குடிப்பதற்குக் கூட தண்ணீர்கூட தராமல் ஏமாற்றிவிட்டார்கள். கேட்டால் எல்லாமே தீர்ந்துவிட்டது என்கிறார்கள். அப்புறம் எதற்காக பணம் வாங்கினார்கள்? சுமார் 5,000 பேருக்க் டிக்கெட்டுகளை விற்று லட்சக்கணக்கில் பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டார்கள்” என்றார்.
ஆந்திராவைச் சேர்ந்த சுற்றுலாப்பயணியான ராஜு, “குழந்தைகளுடன் ஒரு குடும்பத்திற்கு ரூ.25,000/- வசூலித்தார்கள். தண்ணீர், உணவு என்று எதையும் கொடுக்கவில்லை. அதைக்கூட விடுங்கள் எங்கள் குழந்தைகளுக்கு சாப்பிடக் கூட எதுவும் தரவில்லை. 25,000/- ரூபாயை கொடுத்துவிட்டு அவர்களிடம் பிச்சை எடுக்காத குறையாக நின்றோம். இத்தனை மணிக்கு மேல் எங்கே சென்று குழந்தைகளுக்கு சாப்பாடு வாங்குவது ?” என்றார். தண்ணீர், உணவு கிடைக்காமல் வெளியேறிய பயணிகள், இந்த திருட்டு குறித்து புகாரளிக்க வேண்டுமென்று போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்துப் பேச சுற்றுலாத்துறையின் நிர்வாக இயக்குநர் பாலாஜியை தொடர்புகொண்டோம். “இந்த நிகழ்சியை அரசு நடத்தவில்லை. இடம் மட்டும்தான் வாடகைக்கு கொடுக்கப்பட்டது. சென்னையைச் சேர்ந்த ‘ரெஜி கோட்டிங் சிஸ்டம்’ என்ற தனியார் நிறுவனம்தான் டெண்டர் எடுத்து நடத்தியது. இந்த குழப்பங்களுக்கு அவர்கள்தான் காரணம். புக்கிங் டாட்காம் மூலம் சிலருக்கு அதிக தொகைக்கு டிக்கெட்டுகள் விற்கப்பட்டிருக்கின்றன. அதற்கான கட்டணத்தை சம்பத்தப்பட்டவர்களுக்கு கொடுக்கும்படி வலியுறுத்தியிருக்கிறோம்” என்றார்.
நிகழ்ச்சியை நடத்திய ’ரெஜி கோட்டிங் சிஸ்டம் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தின் மேலாளர் வின்சென்ட் என்பவரிடம் பேசினோம். “5,000 டிக்கெட்டுகளை நாங்கள் விற்கவில்லை. அனுமதித்த அளவுக்கு மட்டும்தான் விற்றோம். சுற்றுலாப் பயணிகளுக்கு தண்ணீர் கொடுக்க முடியவில்லை என்பது உண்மைதான். உள்ளூர் மக்கள் உள்ளே நுழைந்து மது பாட்டில்களையும், உணவுகளை எடுத்துக்கொண்டதுடன், எங்களை சமைக்கவும் விடவில்லை. அதனால்தான் உணவு வழங்க முடியவில்லை. உள்ளூர் மக்களை தடுப்பதற்கான வேலையை அரசு செய்திருக்க வேண்டும். சுமார் 400 உள்ளூர் மக்கள் எப்படி உள்ளே நுழைந்தார்கள் என்று தெரியவில்லை.
அவர்களை வெளியேறுங்கள் என்று கூறினால் எங்களை அடிக்க வருவார்கள். அதனால் உணவு கிடைக்காததற்கு நாங்கள் காரணமில்லை” என்றவரிடம், “டிக்கெட் வாங்கியவர்களுக்கு உணவு வழங்க வேண்டியது உங்கள் கடமைதானே?” என்ற நமது கேள்விக்கு, “அதற்காக மேடையை உடைக்கலாமா ? பெண்கள் மீது கை வைக்கலாமா ?” என்றார். ”அதுகுறித்து போலீஸில் புகாரளித்தீர்களா ?” என்ற நமது கேள்விக்கு, “அரசுத் துறை மீது எப்படி எங்களால் புகாரளிக்க முடியும் ? அப்படி கொடுத்தால் அரசுக்கு எதிராக நாங்கள் செயல்படுவதாக ஆகிவிடாதா ?” என்றார் சாதாரணமாக.
“யூனியன் பிரதேசமான புதுச்சேரி முழுக்க முழுக்க சுற்றுலாவையும், சுற்றுலாப் பயணிகளையும் மட்டுமே நம்யிருக்கிறது. அப்படி இருக்கும்போது பல மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளிடம் கோடிக்கணக்கில் பணத்தை வசூலித்துக்கொண்டு, அவர்களுக்கு தண்ணீர் கூட கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்திருக்கிறார்கள். வெளிமாநிலங்களில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் எங்கு சென்று புகாரளிப்பார்கள் ? இது ஒருபுறமிருக்க, ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் குறைந்தபட்ச பாதுகாப்பு வசதிகள் கூட செய்யப்படவில்லை. படகில் ஏறுவதற்காக பயணிகள் காத்திருந்த இடத்தில் பென்சிங் கூட அமைக்கவில்லை. அதனால் உயிரைப் பணயம் வைத்து அவர்கள் அந்தரத்தில் நின்று கொண்டிருந்தார்கள். பாரடைஸ் பீச்சுக்கு வந்திந்ருந்த பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் மது போதையில் இருந்தார்கள். அவர்களை அத்தனை பேரையும் அந்த இரவு நேரத்தில், பாதுகாப்பு கவச உடை கூட இல்லாமல் படகில் அழைத்துச் சென்று, மதுவை ஊற்றிக்கொடுத்து திருப்பி அழைத்து வருகிறார்கள்.
மது போதையில் அவர்கள் தண்ணீரில் விழுந்து உயிர்ச்சேதம் ஏற்பட்டால் அதற்கு அரசு பொறுப்பேற்குமா அல்லது நிகழ்ச்சியை நாங்கள் நடத்தவில்லை என்று கைவிரிக்குமா ? ஆயிரக்கணக்கான உயிர்களை பணயம் வைத்து பாதுகாப்பற்ற இப்படி ஒரு புத்தாண்டு கொண்டாட்டம் தேவையா ? இப்படியான கொண்டாட்டங்களை அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். அத்துடன் நிகழ்ச்சியை நடத்திய தனியார் நிறுவனத்தின் செலுத்திய டெபாசிட் தொகையை பிடித்தம் செய்வதுடன், கூடுதல் தொகையை வசூல் செய்து பாதிக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்கு திருப்பிக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் படகு இல்லத்தில் ஏற்பட்ட சேதங்களுக்கான நஷ்ட ஈட்டையும், அந்த தனியார் நிறுவனத்திடம் இருந்தே வசூலிக்க வேண்டும்” என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.