சென்னை: புத்தாண்டை கொண்டாட மெரினாவில் நேற்று முன்தினம் சுமார் ஒரு லட்சம் பேர் திரண்டனர். அப்போது, நெரிசலில் சிக்கிக் காணாமல் போன 20 பேரை போலீஸார் மீட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். தமிழகம் முழுவதும் நேற்று ஆங்கிலப் புத்தாண்டு உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. அதுவும் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வந்ததால் கடற்கரை, நீர்த்தேக்கம், பூங்காக்கள், பொழுது போக்கு மையங்களில் பொதுமக்கள் குடும்பம் குடும்பமாகத் திரண்டனர். மெரினாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் ஒரே நேரத்தில் குவிந்தனர்.
இதையடுத்து மெரினா கடற்கரையில் அண்ணா சதுக்கம் முதல் கலங்கரை விளக்கம் வரையிலான சர்வீஸ் சாலை மற்றும் கடற்கரை மணற்பரப்பில் போலீஸார் பலத்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். குறிப்பாக, அண்ணா சதுக்கம், உழைப்பாளர் சிலை அருகில் 2 தற்காலிக கட்டுப்பாட்டறைகள் அமைக்கப்பட்டு, கடற்கரையில் நிகழும் நிகழ்வுகள், தகவல்கள் சேகரிக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டது.
மேலும், ட்ரோன் கேமரா மூலம் கூட்டத்தைக் கண்காணித்து, கடற்கரை மணற்பரப்பில் குற்றங்கள் நிகழாமல் கண்காணிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, நேற்று முன்தினம் (1-ம் தேதி) மதியம் முதல் இரவு வரை கடற்கரையில் கூட்டத்தில் காணாமல் போன 17 குழந்தைகள் மற்றும் 3 முதியவர்கள் என 20 பேர் மீட்கப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.