தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி உட்பட பலர் கலந்துகொண்ட பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழாவில், பெண் காவலருக்கு தி.மு.க இளைஞரணி நிர்வாகிகள் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் பலவும் தி.மு.க-வுக்கெதிராக கண்டனம் தெரிவித்துவருகின்றன.
இந்த நிலையில், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றவாளிகளைக் கைதுசெய்யவிடாமல் தடுத்தவர்களையும் கைதுசெய்ய வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார்.
இது குறித்து வானதி சீனிவாசன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சென்னை, விருகம்பாக்கத்தில் மறைந்த தி.மு.க பொதுச்செயலாளர் க.அன்பழகன் நூற்றாண்டு விழாவையொட்டி தி.மு.க சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.
இதில் தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி, தென்சென்னை எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், விருகம்பாக்கம் எம்.எல்.ஏ பிரபாகர் ராஜா உள்ளிட்ட தி.மு.க-வின் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டிருக்கின்றனர். அப்போது, இந்த கூட்டத்துக்கான பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரிடம் தி.மு.க நிர்வாகிகள் அத்துமீறி, பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கின்றனர்.
இந்தக் கொடுமை தாங்காமல் அந்தப் பெண் காவலர் கதறி அழுதிருக்கிறார். இந்தச் செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. பொது வாழ்க்கையில் பயணிக்கும் பெண்ணாக, என் மனம் வேதனையில் துடிக்கிறது. இந்தக் கொடுமை தொடர்பாக, நீண்ட தாமதத்துக்குப் பிறகு, பிரவீன், ஏகாம்பரம் ஆகிய இரு தி.மு.க நிர்வாகிகள் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.
இந்தச் சம்பவம் ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் வெளியாகி மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்திய பிறகு, வேறு வழியின்றி இந்த கைது நடவடிக்கையை ஆளும் தி.மு.க அரசு எடுத்திருக்கிறது. தமிழகத்தின் தலைநகரில், இரண்டு பெண் எம்.பி-க்கள் பங்கேற்ற கூட்டத்தில், பெண் காவலர் ஒருவருக்கே பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இது தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது. தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, குற்றவாளிகளுக்கு பெரும் தைரியம் வந்துவிட்டது.
எதைச் செய்தாலும் தி.மு.க அரசு கண்டுகொள்ளாது என்ற அவர்களின் துணிச்சல்தான், பெண் காவலர் ஒருவரை சீண்டும் அளவுக்கு சென்றிருக்கிறது. இது நமது ஆட்சி, என்ன வேண்டுமானாலும் செய்யலாம். நம்மை காப்பாற்ற எம்.பி இருக்கிறார். எம்.எல்.ஏ, மாவட்டச் செயலாளர், பகுதிச் செயலாளர், வட்டச் செயலாளர் இருக்கிறார் என்ற தைரியம் தி.மு.க-வில் உள்ள ரெளடிகளுக்கு வந்துவிட்டது. அதன் விளைவே விருகம்பாக்கம் சம்பவம். தி.மு.க ஆட்சியில் காவல்துறை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்படவில்லை என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தி.மு.க நிர்வாகிகளை, சம்பவ இடத்திலேயே காவல்துறையினர் பிடித்திருக்கின்றனர்.
ஆனாலும், அந்த கயவர்கள் உடனடியாக கைதுசெய்யப்படவில்லை. பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றவாளிகளைக் கைதுசெய்ய முடியாத அளவுக்கு, காவல்துறையினரின் கரங்களைக் கட்டிப்போட்ட அந்த அதிகார மையம் யார் என்பதை, காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றவாளிகளைக் கைதுசெய்யாமல் காப்பாற்றியவர்கள் எம்.எல்.ஏ-வாக இருந்தாலும், தி.மு.க-வில் எந்த பொறுப்பில் இருந்தாலும் அவர்களையும் உடனடியாக கைதுசெய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் விரைந்து விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.