பொங்கல்; 3 நாளைக்கு சிறப்பு பஸ்; அமைச்சர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தமிழ்நாட்டின் பண்டிகைகளிலேயே நீண்ட விடுமுறை நாட்களை கொண்டது பொங்கல் பண்டிகைதான். பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும்பொங்கல் மற்றும் சனி, ஞாயிறு என ஏறத்தாழ ஒரு வார விடுமுறையாக இந்த பண்டிகை பார்க்கப்படுகிறது.

இந்தப் பண்டிகை கிராமங்களில் தான் சிறப்பாக கொண்டாடப்படும் என்பதால், அங்கிருந்து சென்னை வந்து பணிபுரியும் அனைவரும் பொங்கலுக்கு ஊர் திரும்புவது வழக்கம்.

இதனால் சென்னை பஸ் நிலையங்களில் கூட்டம் நிரம்பி வழியும். இதை சமாளிக்க ஆண்டுதோறும் அரசு சார்பில் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாளில் வருகிறது.

முன்னதாக 14ம் தேதி போகி பண்டிகையும், 16ம் தேதி மாட்டுப் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் மற்றும் உழவர் திருநாள் கொண்டாடப்பட உள்ளது. மொத்தம் 4 நாட்கள் விடுமுறை உள்ளதால் ஏராளமான மக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வார்கள் என்று, எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, பொது மக்கள் வசதிக்காக தமிழ்நாடு அரசு சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பாக இன்று போக்குவரத்துத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 3 நாட்களுக்கு பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஜனவரி 12 முதல் 14ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும், பொங்கலையொட்டி, தமிழ்நாடு முழுவதும் 16,932 பேருந்துகளை இயக்கவும் போக்குவரத்து துறை சார்பில் முடிவு எடுக்கப்பட்டது.

மேலும் பொங்கல் சிறப்பு பேருந்து முன்பதிவிற்காக கோயம்பேட்டில் 26 மையங்களும், தாம்பரம் சானடோரியத்தில் 2 மையங்களும், பூந்தமல்லி மற்றும் மாதவரத்தில் தலா ஒரு மையமும் என மொத்தம் 30 சிறப்பு முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டடு முன்பதிவுகள் நடைபெற ஏற்பாடு செய்யவும் முடிவு செய்யப்பட்டது.

இவை தவிர தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை மற்றும் பேடிஎம், பஸ் இந்தியா போன்ற இணைய தளங்கள் வாயிலாகவும் முன்பதிவுகள் செய்யப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

இந்த கூட்டத்துக்கு பிறகு தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12 முதல் 14ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழ்நாடு முழுவதும் 16,932 பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.

சென்னையில் இருந்து மட்டும் 10749 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இதேப்போல் பொங்கல் முடிந்து திரும்புவதற்காக 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை மொத்தம் 15599 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம் பேருந்து நிலையம், மாதவரம் புதிய பேருந்து நிலையம் மற்றும் கே.கே. நகர் பேருந்து நிலையத்தில் இருந்து பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

இது மட்டும் இல்லாமல் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் உடனடியாக 044 24749002 மற்றும் 044 26280445 ஆகிய எண்களில், பயணிகள் புகார் அளிக்கலாம். இவ்வாறு தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.