திருமலை: ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு தலைமையில் நெல்லூர் மாவட்டம், கந்துக்கூரில் ரோட் ஷோ நடத்தியபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி கால்வாயில் விழுந்து 8 பேர் உயிரிழந்தனர். அதேபோல், குண்டூரில் நடந்த சந்திரண்ணா காணிக்கை பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உயிரிழந்தனர். முன்னாள் முதல்வர் சந்திரபாபு பொதுக்கூட்டத்தால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து, ஆந்திர மாநில உள்துறை செயலாளர் ஹரிஷ்குமார் நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில், ‘இனி சாலைகளில் ரோட் ஷோ, பொதுக்கூட்டம், பேரணி உள்ளிட்டவை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 1961 போலீஸ் சட்டத்தின்படி இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறப்பு அனுமதி அடிப்படையில் பொதுமக்கள் எத்தனை பேர் வருவார்கள், அதற்கான ஏற்பாடுகள் குறித்தும், தனியார் பகுதியில் நடத்தி கொள்வதற்கு போலீசார் மற்றும் காவல் ஆணையர்கள் ஆய்வு செய்த பிறகே அனுமதி பெற்று நடத்திக் கொள்ளலாம்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.