அருணாச்சலப் பிரதேசத்தில் கடந்த மாதம் இந்தியா, சீனா ராணுவ படைகளுக்கு இடையே நடைபெற்ற மோதல் கடும் விவாதமானது. இந்த நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அருணாச்சலப் பிரதேசத்திலுள்ள உள்ள சியோம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் 100 மீட்டர் நீளம் பாலத்தை திறந்துவைத்தார். இது, எல்லை சாலைகள் அமைப்பால் (Border Roads Organisation) முடிக்கப்பட்ட 27 உள்கட்டமைப்பு திட்டங்களில் ஒன்றாகும்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், “உலகம் இன்று பல மோதல்களைக் கண்டு வருகிறது. அதேசமயம் இந்தியா எப்போதுமே போருக்கு எதிரானது. அதுவே நம் கொள்கை. ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக `இது போருக்கான காலம் அல்ல’ என சமீபத்தில் பிரதமர் மோடி கூறியது உலக அளவில் கவனம் ஈர்த்தது. எங்களுக்கு போர் மீது நம்பிக்கையில்லை. ஆனால், கட்டாயப்படுத்தப்பட்டால் நாங்கள் போரிடுவோம்.
அனைத்து வகையான அச்சுறுத்தல்களிலிருந்தும் நாடு பாதுகாக்கப்படுவதை நாங்கள் உறுதி செய்கிறோம். நம் ராணுவ படைகள் தயாராக இருக்கின்றன. எல்லைச் சாலைகள் அமைப்பு அவர்களுடன் தோளோடு தோள் சேர்ந்து நடப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தொடர்ந்து மாறிவரும் உலக சூழல் காரணமாக உருவாகக்கூடிய எதிர்கால சவால்களை வெற்றிகரமாகக் கையாள்வதற்கு, வலுவான, தன்னம்பிக்கையான புதிய இந்தியாவை உருவாக்குவதே நோக்கம்” என்று கூறினார்.