கொல்கத்தாவைச் சேர்ந்த 65 வயதான ஓய்வுபெற்ற அரசு ஊழியரான தபஸ் சாண்டில்யாவின் மனைவி இந்திராணி. கோவிட்-19 தொற்றுநோயின் இரண்டாவது அலையின் போது மே 4, 2021 அன்று இந்திராணி இறந்துவிட்டார்.
அவர் பிரிவைத் தாங்க முடியாத தபஸ் சாண்டில்யா, தனது மனைவியின் நினைவாக 2.5 லட்சம் செலவில் 30 கிலோ எடை கொண்ட சிலிக்கான் சிலை ஒன்றைச் செய்து வீட்டில் வைத்துள்ளார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், தன் மனைவியின் சிலையை தன்னுடனே வீட்டில் வைத்துத் தங்க நகைகளை அணிவிப்பது, தலைவாரி சிங்காரித்து அழகு பார்ப்பது, அருகில் அமர்ந்து தொலைக்காட்சிப் பார்ப்பது என அதனுடனே வாழ்ந்து வருகிறார்.
இது பற்றி உருக்கமாகப் பேசிய தபஸ் சாண்டில்யா, “ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு மாயாபூரில் உள்ள இஸ்கான் கோயிலுக்கு நானும் என் மனைவியும் சென்றிருந்தோம். அங்கு ஏசி பக்தி வேதாந்த சுவாமி அவர்கள் செய்திருந்த சிலைகளைக் கண்டு ஆச்சர்யமடைந்தோம். அப்போது என் மனைவி என்னிடம், ‘உங்களுக்கு முன் நான் இறந்துவிட்டால், இதுபோல் என்னைப் போலவே இருக்கும் சிலையை நீங்கள் செய்ய வேண்டும்’ என்று கண்டிப்புடன் சொன்னார். அவரின் ஆசைப்படி அவரின் முழு உருவ சிலிக்கான் சிலையைச் செய்து என்னுடனே வைத்துக் கொண்டுள்ளேன்” என்றார்.
இந்தச் சிலையை உயிரோட்டத்துடன் இருப்பதுபோல் நேர்த்தியாகச் செய்திருந்த 46 வயதான சுபிமல் தாஸ், “சிலை யதார்த்தமான முகபாவனையைக் கொண்டிருப்பது முற்றிலும் அவசியம். இதைச் செய்து முடிக்க ஆறு மாதங்களுக்கும் மேலானது. அவர் தோற்றம் பற்றிய சில தகவல்களைக் கேட்டறிந்து புகைப்படங்களின் உதவியுடன் வெவ்வேறு கோணங்களில் இந்திராணியின் முகத்தை உணர்ச்சியுடனும் உயிரோட்டத்துடனும் இருக்கும் படி வடிவமைத்தோம்” என்று கூறினார்.
இது சமூக வலைதளங்களில் வைரலாகி பாராட்டுகளைப் பெற்று வருகிறது.