மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ள டிடிஎஃப் வாசன்..!!

தமிழ்நாட்டில் 2கே கிட்ஸ்கள் மத்தியில் சமீபத்தில் பிரபலமானவர் டிடிஎஃப் வாசன். இவர் யூடியூபில் ட்வின் த்ராட்லர்ஸ் என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் தனது பிறந்தநாளுக்காக தன் ரசிகர்களைச் சந்தித்த வீடியோ ஒன்று பெரும் அளவில் வைரலானது. அதில் அவரை பார்க்க ஏகப்பட்ட கூட்டம் கூடியிருந்தது. அன்று முதல் தமிழ்நாட்டில் பெரும் பரவலாக இவரை பற்றி பேசி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கடலூர் புதுப்பாளையம் பகுதியில் திரைப்பட இயக்குநர் செந்தில் செல்லம் என்பவரின் கடலூர் அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக வாசன் வருகை புரிந்தார். அப்போது அவரை காண ஏராளமான பைக் பிரியர்கள் அந்த இடத்தில குவிந்ததால் கடும் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டது.

போலீசார் அங்கு திரண்டவர்களை விரட்டி அடித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய 200க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியது மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக கூட்டம் கூட்டியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

பின்னர் அவர் 40 ரசிகர்களின் முகத்தை முதுகில் பச்சைக்குத்தி கொண்டார். இவ்வாறு தினமொரு சர்ச்சையில் சிக்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் சென்னை வடபழனி கமலா திரையரங்கில் காலேஜ் ரோடு என்ற திரைப்படத்தின் சிறப்பு காட்சியை காண சென்ற அவர், நம்பர் பிளேட் இல்லாத காரில் சென்று மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

இதனை கண்டறிந்த போக்குவரத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். பின்னர் டி.டி.எப் வாசன் வந்த காரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது டி.டி.எப் வாசன் தியேட்டரில் படம் பார்த்துக்கொண்டிருந்தார்.

இதனைத்தொடர்ந்து டி.டி.எப் வாசனுக்கு இந்த தகவல் தெரியவர, விரைந்து காவல்நிலையத்திற்கு சென்றார். அங்கு சென்ற டி.டி.எப் வாசனிடம் காவல் துறையினர் விசாரித்தனர். அப்போது இந்த கார் தன்னுடையது அல்ல என்றும், தனது நண்பரின் காரில்தான் தான் வந்ததாகவும் கூறினார். இருப்பினும் அவர் கூறிய காரணங்கள் போதுமானதாக இல்லாத காரணத்தினால், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.