சென்னை: மெட்ரோ ரயில் தொடங்கப்பட்ட 7 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு 2022ம் ஆண்டில் மட்டும் 6.09 கோடி பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சேவையை கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 29 முதல் சென்னையில் துவங்கியது. இதுவரை சென்னையில் உள்ள மக்களுக்கும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணியாற்றுபவர்களுக்கும் சென்னை மெட்ரோ ரயில் ஒரு பாதுகாப்பான போக்குவரத்து வசதியை செய்து வருகிறது.
தற்போது மெட்ரோ ரயிலில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 2.20 லட்சம் முதல் 2.30 லட்சம் வரை பயணிகள் பயணிக்கின்றனர். சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்ட 7 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு 2022ம் ஆண்டில் மட்டும் 6.09 கோடி பயணிகள் அதிகமாக பயணம் செய்துள்ளனர். இதுகுறித்து மெட்ரோ நிர்வாக அதிகாரி கூறுகையில்: சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கியதிலிருந்து நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருகிறது. கடந்த 2015 முதல் 2018 வரை 2,80,52,357 கோடி பயணிகள் பயணம் செய்தனர். கடந்த 2019ம் ஆண்டில் 3,28,13,628 கோடி பயணிகள் பயணம் செய்தனர்.
கொரோனா பாதிப்பு காரணமாக கடைபிடிக்கப்பட்ட பொது முடக்கத்தினால் சேவைகள் கடநத் 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு மட்டும் 1,18,56,982 கோடி பேர் பயணம் செய்துள்ளனர். 2021ம் ஆண்டில் மட்டும் 2,53,03,383 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் 2022ம் ஆண்டில் 6,09,87,765 கோடி பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். இதுவரை சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த 7 ஆண்டுகளில் அதாவது 2015 முதல் 2022ம் ஆண்டு வரை 15,88,08,208 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.