கொல்கத்தா: நான்கு நாட்களுக்கு முன்பு தொடங்கி வைக்கப்பட்ட புதிய வந்தே பாரத் விரைவு வண்டியின் மீது நடத்தப்பட்ட கல்வீச்சு தாக்குதலில் அதன் ஜன்னல் கண்ணாடி நொறுங்கியதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்த கல்வீச்சு தாக்குதல் சம்பவம் மேற்குவங்க மாநிலத்தின் மால்டா ரயில் நிலையம் அருகில் நடந்துள்ளது. இந்த தாக்குதலில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், இதனால் ரயிலின் பயணத்தில் தாமதம் ஏற்படவில்லை என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக இந்திய ரயில்வே சட்டம் பிரிவு 154 ன்படி அடையாளம் தெரியாத நபர் மீது வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தாக்குதலுக்கு உள்ளான ரயில் நான்கு நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடியால் காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைக்கப்பட்டது. மேற்குவங்க மாநிலம் அதன் முதல் வந்தே பாரத் விரைவு ரயிலை டிச.30 ம் தேதி வரவேற்றது. தனது தாயாரின் இறுதிச்சடங்கு முடிந்த சிலமணிநேரத்தில், ஹவுராவில் இருந்து புதிய ஜல்பைகுரிக்குச் செல்லும் இந்தியாவின் 7வது வந்தே பாரத் விரைவு வண்டியை காணொலி மூலமாக பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
ஹவுரா- ஜல்பைகுரி இடையிலான 550 கிமீ தூரத்தை இணைக்கும் இந்த ரயில் சுமார் ஏழரை மணி நேரத்தில் தனது பயண இலக்கை அடைகிறது. புதன் கிழமையைத் தவிர வாரத்தின் 6 நாட்களும் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில், ஹவுராவில் இருந்து அதிகாலை 5.50 மணிக்கு கிளம்பி மதியம் 1.25 மணிக்கு நியூ ஜல்பைகுரியை அடைகிறது. மறுமார்க்கமாக பிற்பகல் 3.05 மணிக்கு நியூஜல்பைகுரியில் இருந்து கிளம்பி இரவு 10.35 மணிக்கு மீண்டும் ஹவுராவை வந்தடைகிறது. ஏற்கனவே இந்த இரண்டு நகரங்களுக்கும் இடையில் சதாப்தி விரைவு ரயிலும் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.