மேற்கு வங்காளத்தில் டிசம்பர் 30ஆம் தேதி அர்ப்பணிக்கப்பட்ட புதிய வந்தே பாரத் ரயில் மீது கற்கள் வீசப்பட்டதில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கம் தனது முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸை, டிசம்பர் 30 அன்று வரவேற்றது. ஹவுரா மற்றும் நியூ ஜல்பைகுரி (NJP) இடையேயான அதிவேக ரயிலை பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இது நாட்டின் ஏழாவது வந்தே பாரத் விரைவு ரயிலாகும். ஹவுரா மற்றும் என்ஜேபி பகுதிகளுக்கிடையே மூன்று நிறுத்தங்கள் உள்ள இடைவெளி தூரத்தை, இந்த ரயில் சுமார் 550 கிமீ வேகத்தில் கடக்கும். இலக்கை அடைய சுமார் ஏழரை மணி நேரத்திற்கும் சற்று அதிகமாகவே எடுத்துக்கொள்கிறது.
புதன்கிழமை தவிர வாரத்தில் ஆறு நாட்களிலும் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும். இந்த ரயில் ஹவுராவில் இருந்து காலை 5.50 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.25 மணிக்கு NJP சென்றடையும். NJP-யில் இருந்து மாலை 3.05 மணிக்குப் புறப்பட்டு இரவு 10.35 மணிக்கு ஹவுராவை சென்றடையும்.
இந்நிலையில் ஹவுரா மற்றும் நியூ ஜல்பைகுரி பகுதிகளுக்கு இடையே ரயில் இயக்கப்படும்போது, மர்ம நபர்கள் சிலபேரால் ரயிலின் மீது கற்கள் வீசப்பட்டதாகவும், அதன் காரணமாக ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
சம்பவம் குறித்து தெரிவித்திருந்த இந்திய ரயில்வே, ஹவுராவிலிருந்து நியூ ஜல்பைகுரி பகுதியை இணைக்கும் ரயிலான புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது கற்கள் வீசப்பட்டதால், ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன என்று தெரிவித்துள்ளது. மேலும் இந்த சம்பவம் மால்டா ஸ்டேஷன் அருகே நடந்துள்ளதுள்ளதாகவும், அதுகுறித்த விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்தனர். மற்றும் பயணிகள் யாருக்கும் எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை எனவும் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் மீது ரயில்வே சட்டம் 154ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM