விதிமுறைகளை உருவாக்க திரையரங்கு உரிமையாளருக்கு முழு உரிமை: உச்ச நீதிமன்றம் அதிரடி!

திரையரங்குகளில் விதிமுறைகளை உருவாக்க உரிமையாளருக்கு முழு உரிமை உள்ளது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றம் கடந்த 2018 ஆம் ஆண்டு திரையரங்குகள்,

மல்ட்டி ப்ளக்ஸ் திரையரங்குகளுக்கு திரைப்படங்களைக் காண வருபவர்கள் வெளியிலிருந்து எடுத்து வரும் உணவுப் பொருட்களுக்கு அனுமதி மறுக்கக் கூடாது என திரையரங்க உரிமையாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்து இருந்தது. அந்த உத்தரவுக்கு எதிராக அகில இந்திய திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இதில் திரையரங்க உரிமையாளர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், திரையரங்கம் என்பது தனியாருக்கு சொந்தமான இடம், அது பொது கிடையாது. எனவே அதற்குள் என்ன மாதிரியான விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பது உரிமையாளர்களுடைய விருப்பத்தை பொறுத்தது. அதனை அவர்கள் வரையறுக்கலாம் என வாதம் முன்வைக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், திரையரங்க உரிமையாளர்கள் திரையரங்கிற்குள் உணவுப் பொருட்கள் எடுத்து வருவது தொடர்பான விதிமுறைகளை மற்றும் நிபந்தனைகளை உருவாக்க முழு உரிமை உள்ளது என உத்தரவிட்டார். அதேவேளையில் சினிமா பார்க்க வருபவர்கள் அவற்றை சாப்பிடாமல் இருக்கவும் அவர்களுக்கு உரிமை உள்ளது.

வெளி உணவு பொருட்களை திரையரங்கிற்குள் எடுத்து வரக்கூடாது என்பது திரையரங்க உரிமையாளர்களின் வர்த்தக ரீதியான முடிவு. எனவே திரைப்படம் பார்க்க வருபவர்கள் திரையரங்க விதிகளை கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

அதே நேரத்தில் தரமான சுகாதாரமான குடிநீர் என்பது இலவசமாக திரையரங்குகளில் வைக்கப்பட வேண்டும் என்றும், குழந்தைகளுக்கு பெற்றோர் உணவை எடுத்துச் செல்லும் போது திரையரங்கு நிர்வாகம் அதற்கு மறுப்பு தெரிவிக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.