விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை சேர்ந்தவர் ஷேக்முகமது. இவர் லலிதா (56) என்ற யானையை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு ராஜபாளையத்தில் இருந்து, விருதுநகர் ராமர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பிற்காக யானையை லாரியில் ஏற்றிக் கொண்டு வந்தார்.
விருதுநகர் – மதுரை ரோட்டில் உள்ள தனியார் இடத்தில், யானையை லாரியில் இருந்து இறக்கி உள்ளனர். அப்போது யானை லலிதா தடுமாறி அருகில் இருந்த சுவற்றில் மோதி சறுக்கி விழுந்தது. தகவலறிந்து கால்நடை மருத்துவக்குழுவினர் வந்து 3 மணி நேரம் சிகிச்சை அளித்து குளுக்கோஸ் ஏற்றிய நிலையில், யானை கண் விழித்தது.
இதுகுறித்து ராஜபாளையம் வனச்சரக அலுவலர் சக்தி பிரசாத் ஹரிராம் கூறுகையில், ‘‘யானை லலிதாவுக்கு வயதான காரணத்தால் ஓய்வு அளிக்க வேண்டும் என தெரிவித்திருந்தோம். தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. யானை திரும்பி வந்தவுடன் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.