நேற்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அனைத்து வைணவ கோவில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. அந்த வகையில், விருதுநகரில் உள்ள ஒரு கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்காக ராஜபாளையத்தில் இருந்து தனியாருக்கு சொந்தமான யானை ஒன்று வரவழைக்கப்பட்டது.
அதன் படி, ராஜபாளையத்திலிருந்து கொண்டுவரப்பட்ட அந்த யானையை லாரியில் இருந்து கீழே இறக்குவதற்கு முயற்சி செய்தனர். அதன் பின்னர் கீழே இறங்கிய அந்த யானைக்கு, திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு தரையில் படுத்துக்கொண்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த விருதுநகர் கால்நடை துறை இணை இயக்குனர் மருத்துவர் கோவில் ராஜா மற்றும் பிற மருத்துவர்கள் கோவிலுக்கு விரைந்து வந்து யானைக்கு சிகிச்சை அளித்தனர்.
பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக கால்நடைத்துறை அதிகாரி தெரிவித்ததாவது:- “ஏற்கனவே இந்த யானை கடந்த மாதம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்தபோது உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போதே இந்த யானைக்கு மூன்று மாதம் ஓய்வு கொடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தோம்.
இருப்பினும் யானையின் உரிமையாளர்கள் தொடர்ந்து இந்த மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு யானையை அழைத்து வரும் நிலை உள்ளது. இதனால், தற்போதும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.