ஜெய்ப்பூர், ராஜஸ்தானின் ஜோத்பூர் நகருக்குச் சென்ற விரைவு ரயிலின் 13 பெட்டிகள் தடம்புரண்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 26 பயணியர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மஹாராஷ்டிராவில் இருந்து ராஜஸ்தானின் ஜோத்பூர் நகருக்கு, சூரியநகரி விரைவு ரயில் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. இது, ராஜஸ்தானின் பாலி அருகே நேற்று சென்ற போது, இதன் 13 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகின.
தகவலறிந்து விரைந்து வந்த மீட்புப்படையினர், விபத்தில் சிக்கி இருந்தோரை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வடமேற்கு ரயில்வே செய்தித்தொடர்பாளர் கூறியதாவது:
சூரியநகரி விரைவு ரயிலின் 13 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் அதிர்ஷ்டவசமாக எவ்வித உயிரிழப்பும் ஏற்படவில்லை. காயமடைந்த 26 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ரயில் விபத்துக்கு உள்ளானதால், அவ்வழியாக செல்லவிருந்த சில ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன; சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையே, விபத்து நடந்த பகுதியை, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
விபத்தில் படுகாயமடைந்த பயணியருக்கு 1 லட்சம் ரூபாயும், சிறுகாயம் அடைந்த பயணியருக்கு 25 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் அளிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement