வேப்பூர்: வேப்பூர் கூட்ரோடு அருகே நேற்று அதிகாலை அடுத்தடுத்து 5 வாகனங்கள் ேமாதிக்கொண்ட விபத்தில் காரில் பயணம் செய்த சென்னை ஐடி ஊழியர், அவரது மனைவி, 2 குழந்தைகள், தாய் என 5 பேர் உடல்நசுங்கி பலியாகினர். தீயணைப்பு படையினர் ஒன்றரை மணி நேரம் போராடி உடல்களை மீட்டனர். சென்னை, நங்கநல்லூரைச் சேர்ந்தவர் விஜய் வீரராகவன் (41), சென்னையில் உள்ள ஐடி கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவரது சொந்த ஊர் மதுரை. மனைவி வத்சலா (39).
இவர்களின் மகன்கள் விஷ்ணு (6), அதிர்த் (9). இவர்களும், விஜய் வீரராகவனின் தாய் வசந்தலட்சுமி (73)யும் கேரளாவில் உள்ள கோயிலுக்கு காரில் சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு சென்னை திரும்பிக் கொண்டிருந்தனர். காரை விஜய் வீரராகவன் ஓட்டினார். நேற்று அதிகாலை 2.40 மணி அளவில் கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த அய்யனார்பாளையத்துக்கு கார் வந்தது. திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால பணிகள் நடப்பதால் சர்வீஸ் சாலையில் காரை ஓட்டியுள்ளார்.
அப்போது போக்குவரத்து நெரிசலால் முன்னால் சென்ற பஸ், கார் உள்ளிட்ட வாகனங்கள் நின்றிருந்தன. அவற்றின் பின்னால் தனது காரை விஜய் வீரராகவன் நிறுத்தியுள்ளார்.
அப்போது பின்னால் வந்த தாதுமண் ஏற்றிவந்த லாரி, கார் மீது படுவேகமாக மோதியது. இதனால் முன்னால் நின்ற பஸ்சுக்கும் லாரிக்கும் இடையில் சிக்கி கார் அப்பளம் போல் நொறுங்கியது. அப்போது லாரியின் பின்னால் வந்த 2 கார்கள் என அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாயின. இதில் விஜய் வீரராகவன் மற்றும் காரில் இருந்த அவரது தாய், மனைவி, குழந்தைகள் என ஐந்து பேரும் உடல் நசுங்கி பலியானார்கள்.
தகவல் அறிந்ததும் திட்டக்குடி டிஎஸ்பி காவ்யா, வேப்பூர் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். மேலும் வேப்பூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து காரின் இடிபாட்டுக்குள் சிக்கி இறந்துகிடந்தவர்களின் உடல்களை ஒன்றரை மணி நேரம் போராடி மீட்டனர். நசுங்கிய காரையும் கிரேன் மூலம் அப்புறப்படுத்தினர். மதுரையில் வசிக்கும் விஜய் வீரராகவனின் தங்கை வசுதாரணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய விசாரணைக்குப்பின் அவர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்படும். விபத்து நடந்த பகுதியை கடலூர் மாவட்ட எஸ்பி சக்திகணேசன் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் தெலங்கானா மாநிலம் மெஹபூர் நகர் மாவட்டத்தை சேர்ந்த ஹரிகிருஷ்ணனை(21) பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர். கார் மீது லாரி மோதிய விபத்தில் ஐடி கம்பெனி ஊழியர் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உடல்நசுங்கி பலியான சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.