புதுடில்லி : புதுடில்லியில் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த இளம் பெண்ணின் உடல், 12 கி.மீ., துாரம் சாலையில் இழுத்து செல்லப்பட்ட வீடியோ காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.
புதுடில்லி சுல்தான்புரியில் அதிகாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற 20 வயது இளம் பெண் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. கார் சக்கரத்தில் பெண்ணின் உடல் சிக்கிக் கொண்டது. ஆனால் காரை நிறுத்தாமல் அதில் இருந்தவர்கள் ஓட்டி சென்றனர். சக்கரத்தில் சிக்கிய பெண்ணின் ஆடைகள் கிழிந்து, உடல் உறுப்புகள் நசுங்கி உயிரிழந்த நிலையில் காஞ்ஹாவாலா என்ற இடம் வரையில் 12 கி.மீ., துாரம் அவரது உடல், சாலையில் நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்டது.
இந்த காட்சிகள் சமூகவலைதளத்தில் வெளியாகி பலரை அதிர்ச்சி அடைய செய்தது. உயிரிழந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. காரில் இருந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுடில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், ”அந்த 20 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை மிகப் பெரிய தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது.
நம் சமூகம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பது புரியவில்லை. அரிதினும் அரிதான இந்த குற்றத்தில் ஈடுபட்ட ஐந்து குற்றவாளிகளுக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். விபத்து ஏற்படுத்துபவர்களுக்கு அது ஒரு பாடமாக அமைய வேண்டும்,” என்றார்.
துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா நேற்று கூறுகையில், ”மனிதத்தன்மையற்ற கொடூர விபத்தை ஏற்படுத்திய குற்றவாளிகளின் செயல் நம்மை தலைகுனிய செய்துள்ளது. இந்த வழக்கை தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருகிறேன். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement