133 அடி திருவள்ளுவர் சிலை மராமத்து பணிகள் நிறைவு! பொங்கல் முதல் பொதுமக்களுக்கு அனுமதி?

கன்னியாகுமாரி: கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கு இரசாயன கலவை பூசும் பணி நிறைவடைந்தது. 60 டன் இரும்பு பைப்புகள் கொண்டு அமைக்கப்பட்ட சாரம் பிரிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.  சர்வதேச சுற்றுலா ஸ்தலமாக உள்ள கன்னியாகுமரியில் கடந்த 2000 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி அவர்களால்  கடல் நடுவில் 133 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது

வள்ளுவர் சிலை உப்பு காற்றில் இருந்து சேதமடைவதை தடுப்பதற்காக 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை இரசாயன கலவை பூசும் பணி  நடைபெறுவது வழக்கமானது. இந்தமுறை சிலை பராமரிப்பு பணியானது ரூபாய் ஒரு கோடி செலவில் கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்டது.

133 அடி உயரம் கொண்ட சிலையை சுற்றி  சுமார் 60 டன் எடை கொண்ட ராட்சத இரும்பு பைப்புகள் கொண்டு சாரம் அமைக்கப்பட்டு முதலில் சிலையை தண்ணீர் கொண்டு முழுவதுமாக சுத்தம் செய்யப்பட்டு  பின்னர் சிலையின் இணைப்பு பகுதிகளில் உள்ள வெடிப்புகளை சரி செய்யும் விதமாக சுண்ணாம்பு, கடுக்காய், பனை வெல்லம் ஆகியவை கொண்ட கலவை பூசும் பணி நடைபெற்றது.

அதன் பிறகு  காகித கூழ் கலவை  சிலை மீது ஒட்டப்பட்டு, திருவள்ளுவர் சிலையில் படிந்துள்ள உப்பினை எடுக்கும் பணி நடைபெற்று முடிந்தது. அதைத்தொடர்ந்து தண்ணீர் கொண்டு முழுவதுமாக சுத்தம் செய்த பின்னர் ஜெர்மன் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வாக்கர் எனப்படும் இரசாயன கலவை பூசப்பட்டது

தற்போது இந்த பணிகள் அனைத்துமே முடிவுற்ற நிலையில் இந்த பணிக்காக 60 டன் எடை கொண்ட இரும்பு பைப்புகள் மூலம் சிலையை சுற்றி அமைக்கப்பட்ட சாரத்தினை பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளின் ஒரு நிகழ்வாக, தை மாதத்தின் இரண்டாவது நாளான மாட்டுப் பொங்கல் திருநாளன்று, திருவள்ளுவர் நாள் அனுசரிக்கப்படுகிறது. தமிழகத்தில் திருவள்ளுவர் நாளன்று அரசு விடுமுறை ஆகும். அன்று முதல் மீண்டும் சுற்றுலாப் பயணிகள் மீண்டும் திருவள்ளுவர் சிலை அமைந்திருக்கும் இடத்திற்கு க்கு வந்து செல்லலாம்.

*இன்னும் பத்து நாட்களில் இந்த பணி நிறைவடைந்து வரும் பொங்கல் பண்டிகையை ஒட்டி மீண்டும் திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர் என சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.