நாக்பூர்: நாட்டின் முப்படைகளுக்கு அக்னி பாதை திட்டத்தின் கீழ் வீரர்கள் தேர்வு செய்யப்படும் நிலையில், ராணுவத்தில் முதல் பேட்ச் வீரர்களுக்கான 6 மாத பயிற்சி நாக்பூரில் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது.
ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையில் இளைஞர்கள் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் சேவையாற்ற வகை செய்யும் அக்னி பாதை திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு ஜனவரியில் அறிவித்தது. இத்திட்டத்தின் பணியில் சேருவோர் அக்னி வீரர்கள் என அழைக்கப்படுகின்றனர்.
112 அக்னி வீரர்கள்: இந்நிலையில் அக்னி பாதை திட்டத்தின் கீழ் பல்வேறு மையங்களில் தேர்வு செய்யப்பட்ட வீரர்கள், மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் அருகில் காம்ப்டி நகரில் உள்ள இந்திய ராணுவத்தின் காவலர் படைப்பிரிவு மையத் துக்கு கடந்த டிசம்பர் 25 முதல் 31-ம் தேதி வரை வருகை தந்தனர். மொத்தம் 112 அக்னி வீரர்கள் 6 மாத பயிற்சிக்காக இங்கு வந்தனர். இவர்களுக்கு கடந்த திங்கட்கிழமை முதல் பயிற்சி தொடங்கியது. புதிய திட்டம் தொடங்கப்பட்ட பிறகு ராணுவத்தில் பயிற்சி பெறும் முதல் பேட்ச் இதுவே ஆகும்.
இங்கு 6 மாத பயிற்சி முடிந்ததும், அக்னி வீரர்கள் இந்தியராணுவத்தில் கூடுதல் சிறப்பு பயிற்சிக்காக அவர்களது பிரிவுகளுக்கு அனுப்பப்படுவார்கள்.
அக்னி பாதை திட்டத்தின் கீழ் கடற்படைக்கு தேர்வு செய்யப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் ஒடிசா மாநிலத்தில் உள்ள ஐஎன்எஸ் சில்கா கடற்படை தளத்தில் ஏற்கெனவே பயிற்சி பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.