”அதிமுகவில் இணைந்துள்ளேன்” – மீண்டுமொரு முறை கட்சி மாறிய மருத்துவர் சரவணன்!

கடந்த ஆண்டு பாஜகவிலிருந்து விலகிய மருத்துவர் சரவணன் இன்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீர மரணமடைந்த ராணுவ வீரர் லட்சுமணின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கார்மீது பாஜகவினர் காலணியை வீசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அப்போது மதுரை மாவட்ட பாஜக தலைவராக இருந்த மருத்துவர் சரவணன், அவரை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்ததுடன், பாஜகவில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்தார். மேலும் தனக்கு வெறுப்பு மற்றும் மத அரசியல் ஒத்துவரவில்லை என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் பாஜகவில் இருந்து விலகிய திருப்பரங்குன்றம் முன்னாள் எம்.எல்.ஏ மருத்துவர் சரவணன் தற்போது அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு திமுகவில் எம்.எல்.ஏ பதவி வகித்த மருத்துவர் சரவணன் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். பின்னர் பாஜகவிலிருந்து விலகி தற்போது அதிமுகவில் இணைந்துள்ளார். திமுகவில் இணைவதற்கு முன்பே அவர் மதிமுக கட்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.