அதிமுக வழக்கின் விசாரணையை நாளை பிற்பகலுக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
அதிமுகவில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பிரிவாகவும், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றொரு அணியாகவும் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், கடந்த ஆண்டு (2022) ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் 2022 ஆகஸ்ட் 17ஆம் தேதி தீர்ப்பளித்த தனி நீதிபதி ஜெயச்சந்திரன், “அதிமுக பொதுக்குழு செல்லாது; அதற்கு முன்பிருந்த நிலையே நீடிக்க வேண்டும்” என உத்தரவிட்டார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்தது. இதை 2022 செப்டம்பர் 2ஆம் தேதி விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு, தனி நீதிபதி அளித்த தீர்ப்பை ரத்து செய்ததுடன், பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து ஆகியோர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதுதொடர்பாக எடப்பாடி தரப்பிலும் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதுகுறித்த விசாரணை 2022 டிசம்பர் மாதம் 15ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் சாய் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, ‘நேரமின்மை காரணமாக, வழக்கை நாளைக்கு ஒத்திவைக்கலாமா’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பின் தள்ளிவைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை ஜனவரி 4ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
அதன்படி இவ்வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் சாய் ஆகியோர் அமர்வு முன்பு இன்று (ஜனவரி 4) பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில், “நீதிமன்ற விசாரணை காரணமாக கட்சிப் பணிகள் தேக்கமடைந்துள்ளன” என வாதிடப்பட்டது. அதற்கு நீதிபதிகள், “அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் இடையே ஒருங்கிணைப்பு இல்லை. இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டாரா?” எனக் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த எடப்பாடி தரப்பு, “விதிகளின்படி 5இல் ஒரு பங்கு கூடிய உறுப்பினர்களின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்” எனத் தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட பன்னீர்செல்வம் தரப்பு, “உண்மையில் அடிப்படை உறுப்பினர்கள்தான் பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுக்க முடியும்?” என்ற வாதத்தை வைத்தது. அதற்குப் பதிலளித்த எடப்பாடி தரப்பு, “பன்னீர்செல்வம் திமுகவுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்” எனக் குற்றம்சாட்டியது.
தொடர்ந்து நீதிபதிகள், “ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தேர்தல் வைத்து தேர்ந்தெடுக்கப்பட்டதா?” எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பன்னீர்செல்வம் தரப்பு, “அந்தப் பதவிகளுக்கு யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை என்பதால் இருவரும் நேரடியாகவே ஒருமித்த கருத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டனர்” எனத் தெரிவிக்கப்பட்டது.
அதைக் கேட்ட நீதிபதிகள், “ஜூலை 11ஆம் தேதிக்குப் பின்னர்தான் அனைத்தும் மாறியது. அப்படிதானே? எனவே, நீங்கள் எதிர்பார்ப்பது என்ன?” எனக் கேட்டனர். அதற்கு பன்னீர்செல்வம் தரப்பு, “ஜூலை 11ஆம் தேதிக்கு முன்னர் கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற நிலை இருந்ததைப்போன்றே தற்போதும் தொடர வேண்டும்” என்றது.
இதையடுத்து நீதிபதிகள், “பன்னீர்செல்வத்தின் செயல்பாட்டை நீதிமன்றம் கருத்தில் கொள்ளத் தேவையில்லை. இவ்வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கவே வாதங்கள் கேட்கப்படுகின்றன. எனவே, இருதரப்பும் வாதம், உத்தரவு விவரங்களை சுருக்கமாக இன்று தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டனர். அதன்பிறகு நடந்த விசாரணையின்போது, “தமிழில் இருக்கும் ஆவணங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தபோது, சில பிழைகள் ஏற்பட்டுள்ளன” என வழக்கறிஞர் தரப்பு தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து, “இந்த வாரத்துக்குள் இவ்வழக்கை முடிக்க முயல்கிறோம். நாளை மாலை கூடுதலாக 1 மணி நேரம் வழங்கினால் வாதங்களை முடிக்க முடியுமா” எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பன்னீர் தரப்பு 2 மணி நேரமும், எடப்பாடி தரப்பு ஒன்றரை மணி நேரம் அவகாசம் கேட்டு கோரிக்கை வைத்தன. இதைக் கேட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை நாளை மதியம் 2 மணிக்கு ஒத்திவைத்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM