ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்களுக்கு அதிகாரப்பூர்வ அனுமதி அளிப்பதில் ஏற்படும் தாமதம் மற்றும் குளறுபடி உள்ளிட்ட காரணங்களால், சதுரகிரி கோயில் நேற்று பக்தர்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்படுகிறது. அதன்படி பிரதோஷம், பௌர்ணமி, அமாவாசை என மாதத்திற்கு 8 நாட்கள் பக்தர்கள் மலையேறி வழிபட அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் கோயிலுக்கு செல்வது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படாததால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். வாய்மொழி அறிவிப்பு வரும்போதே சூழ்நிலையை பொறுத்தே அனுமதி அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. சூழ்நிலையை பொறுத்து முடிவு எடுக்கிறோம் என்ற பெயரில் கடைசி நேரத்தில் அனுமதி மறுப்பதால் நீண்ட தூரத்தில் இருந்த வரும் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வது தொடர் கதையாகி வருகிறது.
மார்கழி மாத பிறப்பிற்கு அனுமதி அளித்த போது ஒரே நாளில் 5,350 பேர் மலையேறி சாமி தரிசனம் செய்தனர். ஆனால் நேற்று இந்த ஆண்டின் முதல் பிரதோஷத்திற்கு 450 பேர் மட்டுமே மலையேறி சாமி தரிசனம் செய்தனர். இதனால் பரபரப்பாக காணப்படும் கோயில் வளாகமும் மலைப்பாதையும் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.
மாவட்ட நிர்வாகம், வனத்துறை, இந்து சமய அறநிலையத்துறை இணைந்து சதுரகிரி கோயிலில் வழிபாடு அனுமதி குறித்து அதிகாரப்பூர்வமாக அனுமதி அளிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.