“திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது ஸ்டாலின் தன் குடும்பத்தோடு மதுவிலக்கு போராட்டம் நடத்தினார், இப்போது அவர் நினைத்தால் பூரண மதுவிலக்கு செயல்படுத்த முடியும. ஆனால், அவர் செயல்படுத்த முன் வரவில்லை” என முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் பேசியுள்ளார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக வாக்குச்சாவடியில் முகவர்களாக பணியாற்றுவது மற்றும் ஆலோசனை கூட்டம் தூத்துக்குடியில் உள்ள தனியார் மண்டபத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், “திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது பொங்கலுக்கு ரூ. 5,000 கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள். ஆனால், திமுக ஆட்சியில் இருக்கும் இந்நேரத்தில் மக்களுக்கு கரும்பு கூட கொடுப்பதற்கு மனம் இல்லாமல் இரும்பு மனம் படைத்தவர்களாக உள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் குரல் கொடுத்ததற்கு பின்பு தான் கரும்பு கொடுப்பதற்கு அரசாணை வெளியிட்டுள்ளனர். தேர்தல் வாக்குறுதியில் மக்களுக்கு தேவையான வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பெட்ரோல், டீசல் விலை உயர்வை செய்துள்ளனர். இதனால் விலைவாசியும் உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு 110 விதியின் கீழ் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. வேளாண் துறை பட்ஜெட், நிதிநிலை அறிக்கை பட்ஜெட் அதில் கொடுக்கின்ற வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. ஏறத்தாழ 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திட்டங்கள் அறிவிப்பு நிலையிலேயே உள்ளது. அதை முறைப்படுத்தவில்லை.
அம்மா ஆட்சி காலத்தில் தாலிக்கு தங்கம் திட்டம், அம்மா உணவகம், அம்மா கிளினிக், அம்மா சிமெண்ட், அம்மா குடிநீர் என பல திட்டங்கள் உள்ளன. மடிக்கணினி திட்டம் அத்தியாவசிய திட்டம். அதை இந்த அரசு செயல்படுத்தவில்லை. இதனால் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் மாபெரும் வெற்றி பெறுவார் என மக்கள் பேசத் தொடங்கி விட்டார்கள்.
திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது தலைவர் மு.க.ஸ்டாலின் தன் குடும்பத்தோடு மதுவிலக்கு போராட்டம் நடத்தியதை அனைவரும் அறிவோம். இன்று அவர், நினைத்தால் பூரணம் மதுவிலக்கை செயல்படுத்த முடியும். ஆனால் அவர், செயல்படுத்த முன்வரவில்லை. எங்கு பார்த்தாலும் அனுமதி இல்லாத மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இதற்காக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் ஆங்காங்கே நடத்தும் போராட்டத்தால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. போதைப் பொருள் நடமாட்டம் தலை விரித்து ஆடுகிறது. நேற்றைய தினம் முதல்வர் தலைமையில் நடந்த காவல்துறை, உள்துறை உயர் அலுவலர் ஆய்வு கூட்டத்தில் போதை பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என முதல்வர் அறிவுரை கொடுத்து இருப்பதாக செய்திகள் வந்துள்ளது.
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஆதாரத்தோடு, புள்ளிவிவரத்தோடு எடுத்துச் சொல்லும் போது முதல்வர் மானிய கோரிக்கைகளில் உட்கார்ந்து கவனத்தோடு கேட்டது நம்பிக்கையாக இருந்தது. இதற்கு முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுப்பார் என்று நினைத்தோம். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை. ஒவ்வொரு நாளும் மதுபான கடைகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதனால் குற்ற சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது” என குற்றம் சாட்டினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM