சீனாவில் பரவி வரும் பிஎஃப்.7 கொரோனா வைரஸ் உலக நாடுகள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் கலந்து கொண்டு, தங்களது ஆலோசனையை வழங்கின.
இந்த நிலையில், பிஎஃப்.7 கொரோனா வைரஸ் தொடர்பாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கலந்துரையாடியபோது, ‘மாநிலங்கள் விழிப்புடன் இருப்பதோடு, கொரோனாவை கட்டுப்படுத்த தயார் நிலையில் இருக்க வேண்டும்.
இதற்கு முன்பு கொரோனா பரவலை தடுக்க பணியாற்றியது போலவே தற்போதும் மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். கொரோனா கண்காணிப்புகளை தீவிரப்படுத்தி சோதனையை அதிகப்படுத்த வேண்டும். மருத்துவமனை உட்கட்டமைப்பு வசதிகளை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.
எனவே, அந்தந்த மாநில அரசுகள் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டு, அனைத்து விமான நிலையங்களிலும் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன.
இதன் ஒரு பகுதியாக BF.7 கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் கொரோனா பரிசோதனை கடந்த 24ம் தேதியில் இருந்து மேற்கொள்ளப்படுகிறது.
அந்தவகையில் கர்நாடகாவின் பெங்களூரு நகரில் உள்ள புகழ்பெற்ற கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில் சோதனை என்கிற பெயரில் மாணவி ஒருவரை மேலாடையை கழற்ற சொல்லி அதிகாரிகள் அவமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக கிரிஷானி காத்வி என்ற பெண் பயணி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:
பெங்களூரு விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையின்போது எனது சட்டையை கழற்றும்படி கேட்டு கொள்ளப்பட்டது. ஓரு உள்ளாடையை மட்டுமே அணிந்து கொண்டு பாதுகாப்பு சோதனை பகுதியில் நான் நின்றது உண்மையாகவே அவமதிப்புக்கும், வேதனைக்கும் ஆளாக்கியது.
ஒரு பெண்ணாக பலருடைய கவனம் ஈர்க்கும் விதத்தில் நிற்பது என்பது, ஒருபோதும் விரும்பத்தகாத ஒன்று. ஒரு பெண்ணை ஏன் நீங்கள் ஆடையை கழற்றச் செய்ய வேண்டும்?. இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
அதே சமயம், கிரிஷானி காத்வி என்கின்ற அந்த பெண் பயணி மாணவி என்பதோடு இசை கலைஞராகவும் இருந்து வருவதாக தகவல் பரவியதால் பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
இதனை தொடர்ந்து பெங்களூரு விமான நிலையம் சார்பில் மன்னிப்பு கோரப்பட்டது. மேலும் ‘இது நடந்திருக்க கூடாது. இதுகுறித்து எங்கள் செயல் குழுவினருக்கு தெரியப்படுத்தி உள்ளோம். மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கவனித்து வரும் பாதுகாப்பு குழுவினருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என பதிலளித்துள்ளது.
மற்றொரு டிவிட்டர் பதிவில், ‘உங்களுடைய தொடர்பு எண் மற்றும் பிற விவரத்தை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்’ என பதிவிடப்பட்டுள்ளது. ஆனாலும் கிரிஷானி காத்வி பதிவு பிறகு அவரது டிவிட்டர் பக்கத்தில் இருந்து அழிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவரது டிவிட்டர் பக்கமே இல்லை என்றும் தகவல் வருகிறது. ஒரு வேளை பலரும் அவரிடம் தொடர்பு கொண்டு ஆறுதல் என்ற பெயரில் பிற விவரங்களை கேட்பது எரிச்சலை மூட்டி அவரே டிவிட்டரில் இருந்து வெளியேறி இருக்கலாம் என பரபரப்பாக பேசப்படுகிறது.