ஆதார் அடையாள அட்டை என்பது இந்திய குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் 12 இலக்க அடையாள எண் தாங்கிய அட்டை ஆகும். நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் தனித்தனி அடையாள எண் வழங்குவதன் மூலம் நாடுதழுவிய குடிமக்கள் தரவுத்தளத்தை உருவாக்குவதே ஆதார் அடையாள எண் முறையின் நோக்கமாகும்.
இதனிடையே, ஆதார் அட்டை போன்று தமிழ்நாட்டு மக்களுக்கு தனி அடையாள அட்டை வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்கள் கொண்ட மக்கள் ஐடி எனும் பெயர் கொண்ட அடையாள அட்டை வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. The State Family Database – மாநில குடும்ப தரவுதளம் உருவாக்கப்பட்டு, தமிழ்நாட்டில் வசிப்பவர்களுக்கு 10 – 12 இலக்கங்களினான Makkal ID அளிக்கப்படவுள்ளதாகவும், இதற்கான பணிகள் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து, இந்த மக்கள் ஐடி தொடர்பாக பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. இந்த நிலையில், மக்கள் ஐடி குறித்து தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “தரவுகளின் அடிப்படையிலான அரசு (டேட்டா சென்ட்ரிக் கவர்ன்மெண்ட்) என்பது திமுக அரசின் முக்கியமான மக்கள் நல செயல் திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் ஒரு தரவு சார்ந்த உட்கட்டமைப்பை உருவாக்கி குடிமக்களுக்கு அரசின் திட்டங்கள் எளிய முறையிலும், வெளிப்படையான தன்மையுடனும் கிடைக்கப்பெறுவதை உறுதி செய்ய முடியும். மாநிலத்தில் பல்வேறு துறைகள் மூலம் பல நலத்திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நலத்திட்டங்களை பெறும் தகுதியான பயனாளிகளை முறையாக அடையாளம் காணுவதற்கு ‘மக்கள் ஐ.டி’ திட்டம் பெரிதும் உதவுவதோடு, தரவுகள் துறைகளுக்கு திட்டமிடவும் மிகுந்த பயனுள்ளதாக அமையும்.” என்று தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் ஒவ்வொரு துறைக்கும், ஒவ்வொரு திட்டத்திற்கும் தனித்தனியே மென்பொருள் மற்றும் அதற்கான தரவுகள் உள்ளன. இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள தரவுகள் அனைத்தையும் ஒரே தரவு தளத்தில் ஒருங்கிணைத்து திட்டங்கள் தயாரித்தல் மற்றும் நடைமுறை படுத்துதல் என்ற நோக்கத்துடன்தான் மாநில குடும்ப தரவு தள திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “மக்கள் ஐடி மூலம் குடிமக்கள் பெறும் அனைத்து நலத்திட்டங்களும் பல்வேறு துறைகளில் தரவுகளை ஒப்பிட்டு ஒருங்கிணைக்கப்படும். இதன் மூலம் ஒவ்வொரு திட்டத்திற்கும் தகுதியான குடிமக்களை தரவு பகுப்பாய்வு மென்பொருள் மூலமாக எளிதில் அடையாளம் கண்டு நடைமுறைப்படுத்த முடியும். நலத்திட்டங்களுக்காக அரசை தேடி மக்கள் வரும் நிலையை மாற்றி நலத்திட்டங்களை அரசே முன்வந்து தகுதியான நபர்களுக்கு வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.” என்றார்.
மேலும், “தமிழக மக்கள் எண் எனப்படும் 12 இலக்க எண் மாநிலத்தில் உள்ள பல்வேறு துறைகளுக்கு இடையிலான தொடர்புக்கு மட்டுமே பயன்படுத்தப்பட உள்ளது. மாநில குடும்ப தரவு தள திட்டம் மற்றும் மக்கள் எண் திட்டம் எந்த விதத்திலும் தற்போது குடிமக்கள் பெற்றுவரும் எந்தவித நலத்திட்டத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது. தரவுகளின் அடிப்படையில் திட்டங்கள் தீட்டுவதும், நடைமுறைப்படுத்துவதும், தகுதி உள்ள பயனாளிகளுக்கு திட்டங்களின் பயன் கிடைக்கவில்லை என்ற குறைபாட்டையும், தகுதி இல்லாத நபர்களுக்கு திட்டங்கள் வழங்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டையும் நிவர்த்தி செய்யும். தரவுகளை வைத்து திட்டங்கள் தீட்டும் போது, அரசால் தேவைகளை முன்னுரிமை படுத்தவும் தேவைகளை துல்லியமாக கண்டறிந்து அதற்கேற்ப நிதி ஒதுக்கீடுகள் வழங்கவும் முடியும்.” என்று அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
மக்கள் ஐ.டி. ஆதாருக்கு போட்டியானது, ஆதாரை எதிர்ப்பது போல என தவறான தகவல்களை பரப்புகிறார்கள் என்ற மனோ தங்கராஜ், தரவுகளின் அடிப்படையிலான அரசாக இருப்பது காலத்தின் கட்டாயம். அதற்கான பணிகளின் தொடக்கம்தான் மக்கள் ஐடி திட்டம். இது சமுதாய மறுமலர்ச்சிக்கான திட்டம். ஆதார் திட்டம் வேறு, மக்கள் ஐ.டி. திட்டம் வேறு; இதன் பயனும் வேறு. எனவே இதில் அரசியல் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.