லக்னோ: “ராகுல் காந்தியின் நடைபயணத்தை பாராட்டியே ஆகவேண்டும். இந்திய ஒற்றுமை யாத்திரையை ஆர்எஸ்எஸ் கண்டித்ததே இல்லை” என்று ராமர் கோயில் அறக்கட்டளையின் செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார்.
இந்திய அளவில் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் ஒற்றுமை யாத்திரை செவ்வாய்கிழமை மதியம் உத்தரப் பிரதேசத்தை அடைந்தது. அம்மாநிலத்தில் நடைபெறும் யாத்திரைக்கு ராமர் ஜென்மபூமியின் தலைவர் ஆச்சார்ய சத்தியேந்திர தாஸ் தனது ஆசீர்வாதத்தை வழங்கியிருந்தார். இந்தநிலையில் அவரைத் தொடர்ந்து ராமர் கோயில் அறக்கட்டளையின் செயலாளர் சம்பத் ராயும் ராகுல் காந்தியின் யாத்திரைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், “ஒரு இளைஞர் நாட்டிற்காக நடைபயணம் மேற்கொள்கிறார். நான் அவரது முயற்சியை பாராட்டுகிறேன். அதில் தவறு ஏதும் இருப்பதாக தெரியவில்லை. நான் ஒரு ஆர்எஸ்எஸ் ஊழியன் தான். ஆர்எஸ்எஸ் ஒரு போதும் இந்திய ஒற்றுமை யாத்திரையை கண்டித்ததே இல்லை. இந்த கடுமையான காலநிலையிலும் அவர் இந்த நடைபயணத்தை மேற்கொள்கிறார். அதற்னை நாம் பாராட்டியே ஆக வேண்டும். நாட்டில் அனைவரும் யாத்திரை மேற்கொள்ள வேண்டும் நான் சொல்லுவேன்” என்று கூறியுள்ளார்.
முன்னதாக, ராமர் கோயிலின் தலைமை குரு, ராகுல் காந்தி தனது யாத்திரையில் வெற்றி பெறவும், அவர் நீண்ட ஆரோக்கியத்தோடும் ஆயுளோடும் இருக்க அவரை வாழ்த்தியிருந்தார். இது குறித்து செவ்வாய்கிழமை அவர் எழுதிய கடித்தில்,
“நல்லதொரு நோக்கத்திற்காக நீங்கள் உழைக்கிறீர்கள். மக்களின் நலனுக்காகவும், அவர்களின் மகிழ்ச்சிக்காகவும், அனைவருக்கும் மகிழ்ச்சி, அனைவருக்கும் நன்மை என்ற நோக்கத்தில் இதை செய்கிறீர்கள். ராமரின் ஆசீர்வாதம் எப்போதும் உங்களுக்கு இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
உத்தரப் பிரதேசத்தில் இரண்டாவது நாள்: ஒன்பது நாள் குளிர்கால ஓய்வுக்கு பின்னர், செவ்வாய்கிழமை டில்லியில் இருந்து தொடங்கிய இந்திய ஒற்றுமை யாத்திரை மதியம் உத்தரப் பிரதேச மாநிலத்திற்குள் நுழைந்தது. அதில் ரா அமைப்பின் முன்னாள் தலைவர் ஏ.எஸ் துலத், சிவ சேனா கட்சியைச் சேர்ந்த எம்பி பிரியங்கா திவேதி ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக உத்தரப் பிரதேசத்திற்குள் நுழைந்த யாத்திரையை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வரவேற்றார். அம்மாநிலத்தின் எதிர்கட்சித்தலைவர் அகிலேஷ் யாத், மேற்குவங்க முதல்வர் மாயாவதியும் யாத்திரைக்கு தங்களின் ஆதரவினைத் தெரிவித்திருந்தனர்.
இந்தநிலையில், ராகுலின் இந்திய ஒற்றுமை யாத்திரை இரண்டாவது நாளாக உத்தரப் பிரதேசத்தின் மாவிகலா கிராமத்தில் இருந்து புதன்கிழமை தொடங்கியது. அம்மாநிலத்தில் மூன்று நாள்கள் தொடரும் யாத்திரை ஜன.6ம் தேதி மீண்டும் ஹரியாணாவிற்குள் நுழைகிறது. யாத்திரை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா மாவட்டத்தை 20 ஆம் தேதி அடைகிறது. அதனைத் தொடர்ந்து ஜன.30 ஆம் தேதி ஸ்ரீநகரில் நிறைவடைகிறது.