புதுடில்லி: ஒரு நாட்டின் வளர்ச்சியானது சிறந்த மற்றும் நேர்மையான நிர்வாகத்தை பொறுத்து அமையும். வளர்ச்சி தடைப்படுமானால் அதற்கு மிகப்பெரிய காரணியாக இருப்பது லஞ்சம், ஊழல் தான்.
அதிகாரிகள் அனைத்திலும் ஊழல் செய்கின்றனர், எதற்கெடுத்தாலும் லஞ்சம் பெறுகின்றனர் என பெரும்பாலான மக்கள் புலம்புகின்றனர். ஆனால், லஞ்சம், ஊழலை வழிவகுக்க துவக்கப்புள்ளியே நாம் தான் என்பதை உணர வேண்டும். ஆமாம், லஞ்சம் கேட்டால் அதனை நாம் கொடுப்பதும், ஊழலை தட்டிக்கேட்காமல் இருப்பதும், நாட்டின் வளர்ச்சியையே பாதிக்கிறது.
லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் கொடுத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது ஒரு முறையாக இருந்தாலும், லஞ்சத்தை தவிர்க்க நாமும் ஒருபடி மேலே ஏறிதான் ஆகவேண்டும். இதனை எதிர்த்து மக்களாகிய நாம் தான் முறையிட வேண்டும்.
அதாவது, லஞ்சம் கேட்பவர்களுக்கு அவர்கள் பாணியிலேயே பதிலடி கொடுக்க வேண்டும். இந்த கருத்தை வலியுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில், அரசு அலுவலகம் ஒன்றில் முதியவர் ஒருவர் அதிகாரியிடம் கோப்புகளில் கையெழுத்திட கோருகிறார். ஆனால் அவரோ கையெழுத்திட லஞ்சம் கேட்கிறார். அப்போது அம்முதியவர், தன்னிடம் இருக்கும் பர்ஸ், மூக்கு கண்ணாடி, காது கேளாதோர் மெஷின், தனது சர்க்கரை நோய்க்கான மாத்திரைகள் எல்லாம் மேஜையின் மீது வைக்கிறார்.
என்னவென்று புரியாத அதிகாரி, ‘இதையெல்லாம் ஏன் கொடுக்கிறீர்கள்’ என்ற ரீதியில் கேள்வி கேட்கிறார். இதனை மற்ற அலுவலக பணியாளர்களும் கூட்டம்கூடி கவனித்தனர்.
முதியவர் தொடர்ந்து ‘என்னிடம் இருப்பது இதுவே.. எடுத்துக்கொண்டு கையெழுத்திடுங்கள்’ எனக்கூறி தனது பை மட்டுமல்லாமல், தனது உடைகளையும் ஒவ்வொன்றாக கழற்றினார்.
அதிர்ச்சி அடைந்த அதிகாரி, ‘நிறுத்துங்கள், நிறுத்துங்கள்..’ எனக்கூறி வேகமாக கோப்புகளில் கையெழுத்திடுகிறார். இதனையடுத்து முதியவர் நன்றி கூறுகிறார். இதனை பார்த்த அனைவரும் கைத்தட்டி முதியவரை பாராட்டுகின்றனர்.
அதாவது, லஞ்சம் கேட்கும் அதிகாரியிடம் மற்றவர்கள் முன்னிலையில் துணிச்சலாக எதிர்கொள்ளும்போது, லஞ்சத்தை தவிர்க்கலாம். அதுமட்டுமல்லாமல், மக்களுக்கு தேவையான சேவைகளை கடைசி நேரத்தில் சென்று வலியுறுத்துவதால், அவர்களின் அவசரத்தை புரிந்துக்கொண்டு லஞ்சம் பெற்று பணி செய்யும் அதிகாரிகளும் இருக்கின்றனர். இவற்றையெல்லாம் மாற்றி லஞ்சம், ஊழலை தவிர்த்து நாட்டின் வளர்ச்சிக்கு நாமும் ஒரு பங்காற்றிட வேண்டும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்