அம்ரோஹா, :உத்தர பிரதேசத்தில், பிரசவத்துக்கு வந்த பெண்ணின் வயிற்றில் ‘கர்சீப்’பை வைத்து தைத்த டாக்டர் மீது, விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்கு, அம்ரோஹா மாவட்டத்தின் பான்ஸ் கெரி கிராமத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், பிரசவத்திற்காக நஸ்ரானா என்ற பெண் அனுமதிக்கப்பட்டார்.
இவருக்கு அறுவை சிகிச்சை வாயிலாக குழந்தை பிறந்தது. பிரசவம் பார்த்த டாக்டர் மத்லுாப், அறுவை சிகிச்சையின்போது, அஜாக்கிரதையாக கர்சீப்பை நஸ்ரானாவின் வயிற்றில் வைத்து தைத்துவிட்டார்.
இதையடுத்து, அப்பெண்ணுக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
இது குறித்து டாக்டரிடம் கேட்டபோது, குளிர் காரணமாக வயிற்று வலி வரலாம் எனக் கூறி, அதற்கு மருந்து கொடுத்துள்ளார்.
இதையடுத்து மேலும் ஐந்து நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுள்ளார். பின் வீட்டுக்குச் சென்ற பின்னும், நஸ்ரானா வயிற்று வலியால் துடித்துள்ளார்.
உடனே, அவரது கணவர் ஷம்ஷெர் அலி, வேறு ஒரு தனியார் மருத்துவமனையில் தன் மனைவியை சேர்த்துள்ளார்.
அங்கு, டாக்டர்கள் ‘ஸ்கேன்’ செய்து பார்த்தபோது, வயிற்றினுள் கர்சீப் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, நஸ்ரானாவுக்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்து கர்சீப் அகற்றப்பட்டது.
இது குறித்து ஷம்ஷெர் அலி, தலைமை மருத்துவ அலுவலர் ராஜீவ் சிங்காலிடம் புகார் தெரிவித்தார்.
இதையடுத்து, முழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள தலைமை மருத்துவ அலுவலர், குற்றம் உறுதி செய்யப்பட்டால், டாக்டர் மத்லுாப் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்