வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சித்ரதுர்கா,கர்நாடகாவின் முருகா மடத்தைச் சேர்ந்த துறவி மீதான பாலியல் பலாத்கார வழக்கில், புகார் அளித்த சிறுமியர் இருவரும் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான தடயம் இல்லை என மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.
கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள முருகா மடம் என்ற ஆசிரமத்தை, துறவி சிவமூர்த்தி ஷரணரு என்பவர் நிர்வகித்து வருகிறார். இவரது ஆசிரமத்தில் தங்கி இருந்த இரு சிறுமியர், துறவி மீது பாலியல் புகார் தெரிவித்தனர்.
மூன்றாண்டுகளாக தங்களை பாலியல் ரீதியாக அவர் துன்புறுத்தி வந்ததாக தெரிவித்தனர். கடந்த ஆண்டு ஆக., 26ல் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
அதன் பின் செப்., மாதம் துறவி சிவமூர்த்தி ஷரணரு கைது செய்யப்பட்டார். தற்போது அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
போலீசார் வழக்குப் பதிவு செய்த இரு தினங்களுக்கு பின், புகார் அளித்த இரு சிறுமியர்களிடம் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. சிறுமியரின் பிறப்புறுப்புகளை சோதித்ததில், அவர்கள் கன்னித் தன்மை இழந்ததற்கான அடையாளம் தென்படவில்லை என, மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனாலும், தடய அறிவியல் ஆய்வகத்தின் முடிவுகள் வந்த பின்னரே இந்த வழக்கின் போக்கு தெரியவரும் எனக் கூறப்படுகிறது.
இது குறித்து சிறுமியர் தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர் ஸ்ரீனிவாசா கூறியதாவது:
இது போன்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களின் வாக்குமூலத்தை மட்டுமே கருத்தில் வைத்து முடிவெடுக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. எனவே, இந்த மருத்துவ அறிக்கைகள் வழக்கை பாதிக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement