சென்னை மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரின் 16 வயது மகன் கடந்த 2ஆம் தேதி பள்ளிக்கு சென்றார், அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனையடுத்து ரமேஷ் வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரை தொடர்ந்து சென்னை காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், உத்தரவின் பேரில், வேளச்சேரி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
சிறுவன் படித்த பள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் விசாரணை செய்ததில், சிறுவன் அன்றைய தினம் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சென்றது தெரியவந்தது.
தனிப்படை காவல் குழுவினர் விரைந்து செயல்பட்டு எம்ஜிஆர் ரயில் நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அதில், சிறுவன் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குள் நுழைந்து, டெல்லி செல்லும் ஜிடி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறியது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே தனிப்படை காவல் குழுவினர் டெல்லி ஆர்.பி.எப் போலீசாருக்கு தகவல் தெரிவித்து சிறுவனின் புகைப்படத்தை அனுப்பினர்.
மேலும் தனிப்படை காவல் குழுவினர் டெல்லி நிஜாமுதீன் ரயில் நிலையத்திற்கு, ரயில் வரும் முன்பே விரைந்து சென்று காத்திருந்து, இன்று காலை ரயில் நிலையத்தில் இறங்கிய 16 வயது சிறுவனை கண்டுப்பிடித்து சென்னைக்கு அழைத்து வருகின்றனர்.
புகார் கொடுத்த 36 மணி நேரத்திற்குள், காணாமல் போன சிறுவனை கண்டுபிடித்து மீட்ட காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் வெகுவாக பாராட்டினார்.
newstm.in