சம்பா: ஜம்மு மற்றும் காஷ்மீரின் சம்பா சர்வதேச எல்லை பகுதியில் 2 மாதத்திற்கு இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என அரசு அறிவித்து உள்ளது. ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டம் தாங்கிரி கிராமத்தில் புத்தாண்டு தினத்தில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். 3 வீடுகளை குறிவைத்து அவர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ப்ரீதம் லால் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காஷ்மீரில் சமீபகாலமாக குறிப்பிட்ட சமூகத்தினரை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பொதுமக்கள் மீதான இந்த துப்பாக்கி சூடு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி, ஜம்மு பிராந்தியத்தில் பல ஆண்டாக அமைதி நிலவி வரும் நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வட மாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. இதை பயன்படுத்தி எல்லை ஊடுருவல் முயற்சி, ஆளில்லா விமானங்கள் மூலம் ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருள்கள் கடத்தல் போன்ற சம்பவங்கள் அரங்கேறுகிறது. இதனால் எல்லை பகுதிகளில் நடைபெறும் பயங்கரவாத செயல்களை தடுப்பதற்கான தீவிர முயற்சியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் எல்லை பாதுகாப்பு படைவீரர்களின் கோரிக்கையை ஏற்று ஜம்மு காஷ்மீரில் உள்ள சம்பா மாவட்டத்தில் 2 மாதங்களுக்கு இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அனுராதா குப்தா வெளியிட்டுள்ள அறிக்கையில்; சம்பா சர்வதேச எல்லை பகுதியில் 2 மாதத்திற்கு இரவு ஊரடங்கு அமலில் இருக்கும்.
சர்வதேச எல்லை பகுதியில் இருந்து 1 கி.மீ. பரப்பளவிற்கு இரவு 9 மணியில் இருந்து மறுநாள் காலை 6 மணி வரையில் இந்த இரவு ஊரடங்கு அமலில் இருக்கும். இதனால், மக்கள் தேவையின்றி பயணம் செய்ய வேண்டாம் என்றும் அவசரகால பயணம் தேவையென்றால் செல்லும்போது, உடன் ஆவணங்களை எடுத்து செல்லும்படியும் கேட்டு கேட்டுக் கொண்டார். இந்த தடை உத்தரவு முன்பே விலக்கி கொள்ள அல்லது வாபஸ் பெறப்பட கூடும். அப்படி இல்லாத சூழலில், தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது முதல் 2 மாதங்களுக்கு தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வருபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.